நாடாளுமன்றத்தில் ராஜ்ய சபா எம்.பி.யான முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பேச முனைந்தபோது, வேறொரு பிரச்சனைக்காக காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், சச்சினால் சபையில் பேச முடியாமல் போனது.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, வெற்றிக்காகம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயர் ஆகியோர் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் நரேந்திரமோடி கூறினார். அவரது இந்த கருத்துக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையில், இன்று ராஜ்ய சபா உறுப்பினரான சச்சின் டெண்டுல்கர், இந்தியாவில் விளையாட்டு துறையின் முக்கியத்துவம் மற்றும் அதன் எதிர்காலம் குறித்து பேச முனைந்தார். அப்போது, பிரதமர் மோடி, மன்மோகன் சிங் குறித்து கூறிய கருத்துக்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், பேச எழுந்த சச்சின் டெண்டுல்கர் 10 நிமிடங்கள் ஏதும் பேசாமல் நின்று கொண்டே இருந்தார். அப்போது, ராஜ்யசபா சபாநாயகர் வெங்கைய நாயுடு இதற்காக கடிந்துகொண்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயாபச்சன் எம்.பி., சச்சின் டெண்டுல்கர் பேச அனுமதிக்கப்படாதது அவமானகரமானது என தெரிவித்தார்.