புதுச்சேரி, சாரம் பகுதியை சேர்ந்த அப்துல் ஷாகித் என்பவர், விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் வசித்து வருகிறார். இவர் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வீட்டில் வைத்து வளர்க்கக் கூடிய நாய், குருவி போன்றவற்றை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். அப்போது, பலருக்கு விலை உயர்ந்த நாய்கள், பறவைகளை தருகிறோம் என்று ஏமாற்றயதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சிறை சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக கஸ்டம்ஸில் பிடிபடுகின்ற பொருள்களை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி, புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பெற்றுள்ளார். இதில் சிலருக்கு மட்டுமே பொருள்களை கொடுத்து, மற்றவர்களிடமிருந்து பணத்தை பறித்து ஏமாற்றியுள்ளார்.
இந்நிலையில், முதலியார் பேட்டையைச் சேர்ந்த ராஜா என்பவர், அப்துல் ஷாகித் தன்னிடமிருந்து சுமார் ரூ. 13 லட்சத்திற்கு மேல் பணத்தை ஏமாற்றியதாக போலீசாரிடம் புகாரளித்துள்ளார். அதனடிப்படையில், கோட்டகுப்பத்தில் வைத்து அப்துல் ஷாகித்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட அப்துல் ஷாகித்தை, தலைமை குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“