கர்நாடக மாநிலம் ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), அவரது டிப்ளமேட்டிக் (ராஜதந்திர) பாஸ்போர்ட்டை ரத்து செய்யக் கோரி வெளியுறவு அமைச்சகத்திற்கு (MEA) கடிதம் எழுதியுள்ளது.
2024 ஏப்ரல் 28 அன்று பதிவு செய்யப்பட்ட பலாத்கார வழக்கில் பெங்களூருவின் மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது.
இந்த நிலையில், இரண்டு நாள்களுக்குப் பிறகு இது வந்துள்ளது. இதற்கிடையில், பிரஜ்வலின் உறவினரும் முன்னாள் முதலமைச்சருமான ஹெச்டி குமாரசாமி, மே 20 திங்கள்கிழமை, அவர் நாடு திரும்பி வருமாறு முறையிட்டார். மேலும், “சட்ட செயல்முறைக்கு தன்னை உட்படுத்துங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து பேசிய குமாரசாமி, “எங்கள் குடும்பம் மற்றும் எங்கள் பெரியவர்கள் மீது உங்களுக்கு ஏதேனும் மரியாதை இருந்தால் (ஜேடி(எஸ்) தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவே கவுடாவைக் குறிப்பிட்டு), நீங்கள் எந்த நாட்டிலிருந்து திரும்பி வந்தாலும் ஒத்துழைக்குமாறு ஊடகங்கள் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நாட்டின் சட்டம் அதன் போக்கை எடுக்கும். இந்த கண்ணாமூச்சி விளையாட்டை எவ்வளவு நேரம் விளையாட முடியும்? நீங்கள், 24 மணி முதல் 48 மணி நேரத்திற்குள் சரணடைய வேண்டும் என்று கைகூப்பியபடி கேட்டுக்கொள்கிறேன். குடும்பம் இப்படி ஒரு வேண்டுகோள் விடுப்பது இதுவே முதல் முறை” என்றார்.
தொடர்ந்து, “பாதிக்கப்பட்ட நபர்களிடம் குமாரசாமி மன்னிப்பு கோரினார். அப்போது குமாரசாமி, “இதில் பாதிக்கப்பட்டவர்களிடம் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். அவர்களின் வலி எனக்கு புரிகிறது” என்றார்.
முன்னாள் பிரதமர் எச்டி தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்து அதை படம்பிடித்ததாகக் குற்றம் சாட்டியதை அடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.
அவர் தொடர்பான 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் தன்னுடன் வேலை பார்த்த சில ஊழியர்களின் மனைவிகளும் இடம்பெற்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இந்த வீடியோ விவகாரம் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“