”ஆதாரை கட்டாயமாக்கினால் பிறப்பு முதல் இறப்பு வரை கண்காணிக்கப்படுவது போன்ற நிலைமை உருவாகும்”: உச்சநீதிமன்றம்

தனியார் நிறுவனங்களுக்கு மக்கள் தங்கள் தகவல்களை தருமாறு நிர்ப்பந்திப்பது ஏன் என, தனித்துவ அடையாள ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு மக்கள் தங்கள் தகவல்களை தருமாறு நிர்ப்பந்திப்பது ஏன் என, தனித்துவ அடையாள ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

ஆதார் அட்டையின் செயல்பாட்டுக்கு எதிரான பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மனுதாரர்கள் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் தமது வாதங்களை முன்வைத்தார்.

தனியார் நிறுவனங்களுக்கு மக்கள் தங்கள் தகவல்களை தருமாறு கட்டாயப்படுத்த முடியாது என்ற வாதத்தையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு சரமாரி கேள்விகளை எழுப்பியது.

காப்பீடு செலுத்துவதற்காக தனியார் நிறுவனங்களிடம் செல்லும்போதும், செல்போன் நிறுவனங்களிடம் இணைப்புக்காக செல்லும்போதும் ஒருவர் தன் தகவல்களை தெரிவிக்க வேண்டியுள்ளது. ஒருவர் தாமாக முன்வந்து தகவல்களை தெரிவிப்பதில் பிரச்சனை இல்லை எனவும், ஆனால், அதனை முன்பின் அறியாத நபர் அல்லது நிறுவனத்திடம் தகவல்களை தெரிவிக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவதில்தான் பிரச்சனை எழுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தனியார் நிறுவனங்கள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க இயலும் என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்படும் விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், ஆதாரை பொறுத்தவரை இத்தகைய பாதுகாப்பு இருக்கிறதா என கேள்வியெழுப்பினர்.

ஆதார் எண்ணை கட்டாயமாக்கினால் ஒருவர் பிறப்பது முதல் இறப்பது வரை கண்காணிக்கப்படுவது போன்ற நிலைமை உருவாகிவிடும் எனக்கூறிய நீதிபதிகள், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது ஒருவரின் தனிப்பட்ட நிறுவனங்கள் தனியாருக்கு போய் சேர்ந்துவிடுவதாக தெரிவித்தனர்.

குடிமக்களின் தோழனாக மத்திய அரசு இருக்க வேண்டுமே தவிர, அவர்களை கண்காணிப்பவர்களாக இருக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

×Close
×Close