புதுச்சேரி வேளாண்மை துறை சார்பில் ஆடிப் பருவத்திற்கான காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கும் விழா முதல்வர் ரங்கசாமி அலுவலகத்தில் இன்று (ஜூலை 20) நடைபெற்றது. புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, தோட்டக்கலை பிரிவு ஆகியவை மூலம் பயிர் சாகுபடி மற்றும் உற்பத்திதிறன் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
புதுவை மக்களுக்கு தேவையான பசுமையான மற்றும் தரமான காய்கறிகளை அவர்களின் வீட்டுப் புறக்கடை மற்றும் மாடியில் அவர்களே சாகுபடி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில், ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைக்க ரூபாய் 230/- மதிப்புள்ள காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் பெங்களூரிலிருந்து பெறப்பட்டு இவ்வாண்டு ஆடிப்பருவத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.
முதலமைச்சர் ரங்கசாமி, வேளாண் அமைச்சர் தேனி. C.ஜெயக்குமார் ஆகியோர் பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பை விவசாயிகள், பொதுமக்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் ராமகிருஷ்ணன், தனிச்செயலர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“