டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் எடை தொடர்ந்து 65 கிலோவாக உள்ளது என்று புதன்கிழமை நிர்வாகம் தெளிவுபடுத்தியது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி மூன்று நாள்களில் ஆம் ஆத்மி தலைவர் 4.5 கிலோ எடை குறைந்ததாக கூறியிருந்தார்.
இது தொடர்பாக டெல்லி திகார் சிறை நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், “01.04.2024 அன்று வந்தவுடன், அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டார். அவர் இயல்பாக உள்ளார்.
அவர் சிறைக்கு வந்ததிலிருந்து இன்றுவரை அவரது எடை 65 கிலோவாகவே உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டில் சமைத்த உணவு வழங்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
தனது சமூக ஊடகப் பதிவில், அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடுமையான நீரிழிவு நோயாளி என்றும், பாரதிய ஜனதா கட்சி (BJP) அவரை சிறையில் அடைப்பதன் மூலம் அவரது உடல்நிலையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “அரவிந்த் கெஜ்ரிவால் ஜி கடுமையான நீரிழிவு நோயாளி. உடல் நலக்குறைவு இருந்தபோதிலும், அவர் 24 மணி நேரமும் நாட்டு சேவையில் ஈடுபட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து, கெஜ்ரிவாலின் எடை 4.5 கிலோ குறைந்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது. அவரை சிறையில் அடைப்பதன் மூலம் பாஜக அவரது உடல்நிலையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது" என்று தெரிவித்து இருந்தார்.
கெஜ்ரிவால் கைது
டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது. ஏப்ரல் 1 ஆம் தேதி, டெல்லி நீதிமன்றம் அவரை ஏப்ரல் 15 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“