”மக்கள் பணியே முக்கியம்”: கைக்குழந்தையுடன் சட்டப்பேரவைக்கு வரும் ஆம் ஆத்மி எம்எல்ஏ

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சரிதா சிங் தனது இரண்டு மாத குழந்தையுடன் வருகை தருகிறார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் அந்த குழந்தையை தங்கள் மடியில் வைத்துக்கொள்கின்றனர்.

டெல்லி சட்டப்பேரவைக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சரிதா சிங் தனது இரண்டு மாத குழந்தையுடன் வருகை தருகிறார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் அந்த குழந்தையை தங்கள் மடியில் வைத்துக்கொள்கின்றனர்.

ரோஹ்தாஸ் நகர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சரிதா சிங். இவரும் அதே கட்சியை சேர்ந்த அபிநவ் ராய் என்பவரும் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், சரிதா சிங்குக்கு கடந்த நவம்பர் 8-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு அத்வைத் என பெயர் சூட்டினர்.

இந்நிலையில், சரிதா சிங் சட்டப்பேரவை அலுவல்கள், மக்கள் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றுக்காக சட்டப்பேரவைக்கு தினந்தோறும் வரவேண்டிய நிலைமை உள்ளது. இதனால், தன் இரண்டு மாத குழந்தையை தினமும் சட்டப்பேரவைக்கு அழைத்து வருகிறார் சரிதா சிங். அவர் சில பணிகளில் இருக்கும்போது, அக்குழந்தையை மற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தங்கள் மடியில் வைத்து பார்த்துக்கொள்கின்றனர்.

இதுகுறித்து சரிதா சிங் கூறியதாவது, “நாங்கள் மக்களுக்கு சேவையாற்றுபவர்கள் என்பதால், எங்களுக்கு பேறுகால விடுப்பு என்பது இல்லை. நாங்கள் மக்களுக்கு நம்பகமானவர்கள். நாங்கள் சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும். என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தை நான் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன்” என கூறினார்.

டெல்லி சட்டப்பேரவையில் பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு பேறுகால விடுப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், டெல்லி சட்டப்பேரவையில் மழலைகளுக்கென தனி அறை இல்லை என்பதால், சரிதா சிங் தனது குழந்தைக்கு பால் கொடுக்க துணை சபாநாயகரின் அலுவலக அறையை பயன்படுத்தி வருகிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close