20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த ஜனாதிபதியின் உத்தரவையும் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்களை நாடாளுமன்ற செயலாளர்களாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நியமித்தார். இது அமைச்சருக்கு இணையான பதவியாகும். ஆனால், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்களும் ஆதாயம் இரும் இரட்டை பதவி வகிப்பதாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தன. இதற்கிடையே பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜர்னைல் சிங் என்ற எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால், 20 எம்எல்ஏக்கள் மீதான புகாரை மட்டும் தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது.
இதில் 20 எம்எல்ஏக்கள் 2015-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதியில் இருந்து, 2016 செப்டம்பர் 8 வரை ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்து வரும் குற்றச்சாட்டு உண்மை என்பதால், அவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஜனவரி 21ம் தேதி இதற்கு ஒப்புதல் அளித்தார்.
இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை செல்லாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த ஜனாதிபதியின் உத்தரவையும் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், "20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. அவசர கதியாக விசாரிக்கப்பட்டு குடியரசு தலைவருக்கு இந்திய தலைமை தேர்தல் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இதனால் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தது செல்லாது" என குறிப்பிட்டுள்ளது.
தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “இது உண்மைக்கு கிடைத்த தீர்ப்பு. டெல்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறாக தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். டெல்லி மக்களுக்கு உயர்நீதிமன்றம் நீதி வழங்கியுள்ளது. டெல்லி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. டெல்லி மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.