டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கடந்தாண்டு அக்டோபரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பியும், ஆம் ஆத்மி தலைவருமான சஞ்சய் சிங்குக்கு 6 மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 2) ஜாமீன் வழங்கியது. ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை என இ.டி தெரிவித்த நிலையில் நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக சிங் அக்டோபர் 4, 2023 அன்று கைது செய்யப்பட்டார். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர் ஆகியோரைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்றாவது ஆம் ஆத்மி தலைவர் இவர் ஆவார்.
தொடர்ந்து இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். மார்ச் 21 அன்று
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவரை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி பிபி வரலே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜரானார். அப்போது, அவரிடம் நீதிபதிகள்,
சிங்கை மேலும் காவலில் வைக்க வேண்டுமா என்று கேட்டது. தொடர்ந்து சிங் 6 மாதங்கள் சிறையில் இருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
எஸ்.வி.ராஜு கூறுகையில், "எப்.ஐ.ஆர் மற்றும் பி.எம்.எல்.ஏ வழக்கில் இருந்து எழும் நடவடிக்கைகளில் சஞ்சய் சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார். தொடந்து நீதிமன்றம், அறிக்கையின் அடிப்படையில், தற்போதைய மேல்முறையீட்டை (ஜாமீன் விவகாரம்) நாங்கள் அனுமதிக்கிறோம் மற்றும் விசாரணை நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி விசாரணை நிலுவையில் இருக்கும் போது சஞ்சய் சிங் ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடுகிறோம்” என்று கூறியது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/sanjay-singh-bail-aap-delhi-excise-police-case-supreme-court-ed-9246689/
ஜாமீனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் விசாரணை நீதிமன்றத்தால் அமைக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னதாக சிங் சிறையில் இருந்த போதும் மார்ச் 19 அன்று ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்க அனுமதிக்கப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“