மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் சனிக்கிழமை (நவ.5) ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
அந்தக் குற்றச்சாட்டில், “மாநிலங்களவைக்கு சீட் வழங்க ரூ.50 கோடி வரை அரவிந்த் கெஜ்ரிவால் பேரம் பேசியதாகவும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து 20-30 பேரை அழைத்துவந்து கட்சிக்கு ரூ.500 கோடி வரை நிதி வழங்க கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.
மேலும், சந்திரசேகர் முன்னதாக டெல்லி லெப்டினன்ட் கவர்னர் (எல்-ஜி) வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் எழுதி, பணமோசடி வழக்கில் சிறையில் இருக்கும் டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீதும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதில், துணை நிலை ஆளுநர் கடிதத்தை தலைமைச் செயலருக்கு அனுப்பி, சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் சுகேஷ் ஒரு குண்டர், மோர்பி சம்பவத்தை திசை திருப்ப இவ்வாறு பேசுகிறார் என அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு அவதூறு வழக்கு பதிவு செய்யப் போவதாக சுகேஷ் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் தாம் ரூ.50 கோடி அளித்த பின்னர் கெஜ்ரிவாலும் நானும் இரவு விருந்து சாப்பிட்டோம் எனவும் சுகேஷ் கூறியுள்ளார்.
சந்திரசேகரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ““குஜராத் மற்றும் டெல்லி மாநகராட்சித் தேர்தல்களின் முடிவைப் பற்றி பாஜக மிகவும் கவலையடைந்துள்ளது. அதன் விரக்தியானது சுகேஷ் சந்திரசேகர் போன்ற ஒரு கோமாளியை பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகராகத் மாற்றியுள்ளது.
இந்த சுகேஷ் யார்? பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ரான்பாக்ஸியின் ஷிவேந்தர் சிங்கும் அவரது சகோதரரும் சிறையில் இருந்தபோது, சுகேஷ் சிங்கின் மனைவியிடம் ரூ.215 கோடி கேட்டுள்ளார்.
அவர் கேட்ட பணம் முதலில் சட்டச் செயலர், உள்துறைச் செயலர், பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா பெயரில் வழங்கப்பட்டுள்ளது. இன்று அவருக்கு பாஜகவின் தூதராகவும், நட்சத்திர பேச்சாளராகவும் திகழ்கிறார்.
மேலும், சுகேஷ் ஒரு போதும் பொய் சொல்லாத புத்திசாலியா? என நான் கேட்கிறேன்” என்றார். தொடர்ந்து, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அபத்தமானவை” என்றார்.
முன்னதாக மணீஷ் சிசோடியா, “குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச தேர்தல்களில் தோற்றுவிடுவோமோ என பாஜக அஞ்சுகிறது. அதற்காக திகாருடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
அவரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். பாஜக பதிலுக்கு உதவும். ஏனெனில் அவர் வழக்குகளுடன் போராடுகிறார். மேலும் அடுத்த வாரம் ஜெ.பி. நட்டா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைவதாகவும் ஒரு தகவல் உள்ளது” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil