டெல்லி தலைமை செயலாளர் அன்ஷூ பிரகாஷ், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களால் தாக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, டெல்லி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அரசின் விளம்பர செலவு குறித்து கடந்த திங்கள் கிழமை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ஹ்ரிவால் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதி. இதில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர் அன்ஷூ பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கும் தலைமை செயலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள், ஆளுநர் அணில் பைஜாலிடம் புகார் அளித்தனர். அதில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அமானத்துல்லா கான், பிரகாஷ் ஜர்வால் ஆகியோர் தலைமை செயலாளரை தாக்கியதாக குற்றம்சாட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தனர்.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் சிசிடிவி வீடியோ பதிவுகளை கைப்பற்ற அவரது வீட்டில் டெல்லி போலீசார் சோதனை மேற்கொண்டனர். டெல்லி முதலமைச்சர் வீட்டில் இதுபோன்று போலீசார் சோதனை மேற்கொள்வது இதுவே முதன்முறை. இதற்காக, 150க்கும் மேற்பட்ட போலீசார் அவரது வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர்.
இந்த புகார் குறித்து விசாரிக்க முதலமைச்சர் வீட்டில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்றால், நீதிபதி லோயா மரணம் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்”, என அரவிந்த் கெஜ்ரிவால் தன் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடினார்.
முதலமைச்சர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.