நோபல் பரிசு வென்ற அபிஜித் இடது சார்பு கொண்டவர்; மக்கள் நிராகரித்து விட்டனர் – அமைச்சர் பியூஷ் கோயல்

ஒரு இந்தியருக்கு நோபல் பரிசு கிடைத்ததில் நான் பெருமைப்படுகிறேன், ஆனால் அவருடைய யோசனைகளுடன் நான் உடன்பட வேண்டிய அவசியமில்லை

By: October 18, 2019, 9:34:59 PM

பொருளாதாரத்திற்கான 2019 நோபல் பரிசை வென்ற அமெரிக்கவாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி சிந்தனையில் இடதுசாரி தாக்கம் முழுமையாக உள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் பணியாற்றி வருபவர் அபிஜித் பானர்ஜி, இவருடைய மனைவியும் பொருளாதார ஆய்வாளருமான எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரீமர் என்ற பொருளாதார நிபுணர் ஆகியோருடன் இணைந்து 2019ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


அவர் சமீபத்தில், ”தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி பார்த்தால் நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு எந்தவிதத்திலும் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது என்றும் இந்திய பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ”அபிஜித் பானர்ஜி அறிக்கை குற்ற உணர்வை ஏற்படுத்தவில்லையா?” என்று மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

எனினும் மத்திய அரசு சார்பில் இதுவரை யாரும் அபிஜித் பானர்ஜி கூறிய கருத்தை மறுத்தோ ஆதரித்தோ கருத்து தெரிவிக்காத நிலையில் தற்போது மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பியூஷ் கோயல், “நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியை நான் வாழ்த்துகிறேன். அவரது சிந்தனை முற்றிலும் இடது சார்பு கொண்டுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அபிஜித் பானர்ஜி முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘நியாய்’ என்ற வறுமை ஒழிப்புத் திட்டத்தை ஆதரித்தவர். ஆகையால், இந்திய மக்கள் இவரது சித்தாந்தத்தை நிராகரித்துவிட்டனர்.


ஒரு இந்தியருக்கு நோபல் பரிசு கிடைத்ததில் நான் பெருமைப்படுகிறேன், ஆனால் அவருடைய யோசனைகளுடன் நான் உடன்பட வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக இந்த நாட்டு மக்கள் அவரது ஆலோசனையை நிராகரித்தபோது, அவருடைய கருத்துக்களை நாங்கள் ஏற்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்” என்றார்.

மத்திய பாஜக ஆட்சியையும் மகாராஷ்டிரா பாஜக ஆட்சியையும் பொருளாதாரக் கொள்கைகளையும் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சிக்க, அது குறித்த கேள்விக்கு அமைச்சர் பியூஷ் கோயல், “மன்மோகன் தலைமையில் எந்த ஒரு விதிமுறையும் மதிக்கப்படவில்லை. வெளிப்படைத்தன்மைக்கான அடிப்படைகள தூக்கி எறியப்படன.

காங்கிரஸ் தலைமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஊழலும், 1.86 லட்சம் கோடி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகளும் நடந்தன.

மன்மோகன் சிங்கைச் சுற்றி பல ஊழல்கள் வெடித்தன. இதற்கு அவரிடம் ஒரேயொரு பதில்தான் இருந்தது, அதாவது, ‘கூட்டணி ஆட்சியின் அழுத்தங்கள்’ என்பது அது. தேச நலன்களை கருத்தில் கொள்ளாமல் ஒரு பிரதமர் கூட்டணி அரசியலின் அழுத்தங்கள் பற்றி பேசுவது வெட்கக் கேடு” என்றார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Abhijit banerjee left leaning backed congress nyay that people rejected piyush goyal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X