ABVP forces lecturer : சமீபத்தில் பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் இடையே மிகவும் பதட்டமான சூழல் நிலவி வந்தது. பாகிஸ்தான் இந்தியவை பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதும், பாகிஸ்தானில் மாட்டிக் கொண்ட இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமானை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுதலை செய்த போதும், இம்ரான் கான் மீது இந்தியர்களுக்கு ஒருவித நல்ல புரிந்துணர்வும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டது மறைக்க இயலாத உண்மை.
பேராசிரியரை மன்னிப்பு கேட்க வைத்த ஏ.பி.வி.பி.
அவரின் செயலை பாராட்டும் வகையில் சமூக வலைதளங்களில் எண்ணற்ற பதிவுகளை பகிர்ந்திருந்தனர் இந்தியர்கள். அப்படித்தான் கர்நாடக அமைச்சர் எம்.பி.பாட்டில் நடத்திவரும் பி.ஜி.ஹலாகட்டி பொறியியல் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றி வருகின்ற சந்தீப் வத்தாரும் ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏ.பி.வி.பி இந்து மாணவர்கள் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, அந்த பேராசிரியரை நேரில் அழைத்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். கைகளை கட்டுக் கொண்டு மன்னிப்பு கேட்ட அவர் மேலும் இது போன்று நடக்காது என்றும் கூறியுள்ளார். இந்த நிகழ்வை வீடியோவாக பதிவாக செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர் அவர்கள். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த நிகழ்வானது கல்லூரி நிர்வாகிகள் மற்றும் காவல்த்துறையினர் முன்னிலையில் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பில் இருந்தும் புகார்கள் அளிக்கப்படாததால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்று சுப்ரிடெண்ட் ஆஃப் போலீஸ் ப்ரகாஷ் நிக்கம் அறிவித்துள்ளார்.
பஹூஜன் வித்யார்த்தி பரிஷாத் அமைப்பின் தலைவர் ஸ்ரீநாத் புஜாரி இது குறித்து அறிவிக்கையில், ஏ.பி.வி.பி. அமைப்பினர்களுக்கு ஏதோ ஆகிவிட்டது. சட்டத்தினை கையில் எடுக்க அவர்களுக்கு யார் அங்கீகாரம் கொடுத்தது. பேராசிரியர் குற்றம் இழைத்ததாக அவர்கள் கருதினால் நிச்சயம் புகார் தான் அளித்திருக்க வேண்டுமே தவிர இப்படி நடந்திருக்க கூடாது. உள்த்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இது நடந்தது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.