2018-19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நேற்று தொடங்கியது. பொருளாதார ஆய்வறிக்கையை அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இதில், 2018-19ம் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 முதல் 7.5 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடந்த ஓராண்டில் அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளின் இரட்டிப்பு பயனாக, இந்திய நாட்டின் உள்நாட்டு உற்பத்தி கடந்தாண்டைவிட அதிமாகி 6.75 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.
உலகளவில் பொருளாதார ரீதியாக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் விவசாயம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவற்றிலும் உரிய நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும், கடந்த 6 ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் கடந்த ஆண்டில் மிகக்குறைவான பணவீக்கம் இருந்துள்ளதாக அருண் ஜெட்லி ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குடியரசு தலைவர் உரையின்பொழுது, அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதது போல் மற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் பேசியபடியே இருந்தார் எனநேற்று தகவல்கள் வெளியாகின. குடியரசு தலைவர் உரையின்பொழுது கை தட்டல்கள் எழுந்த பொழுதும் ராகுல் காந்தி அதில் கலந்து கொள்ளவில்லை என்றும், குடியரசு தலைவர் உரை முடிந்தபின் சோனியா காந்தி தனது மேஜையில் தட்டிய நிலையிலும் ராகுல் அதில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ அலுவலக ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 'தொழில், வேளாண்மை, ஜிடிபி, வேலை வாய்ப்பு என எந்த துறையிலும் நாடு வளர்ச்சி பெறவில்லை' என்று குறிப்பிட்டு, 'டோன்ட் வொர்ரி... பீ ஹேப்பி' என்று கேப்ஷனிட்டு அந்த வீடியோ போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோ தற்போது நாடு முழுவதும் வைரல் ஆகி வருகிறது.