மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேசிய இருபெறும் கட்சிகளில் காங்கிரஸ் போன முறை விட்ட ஆட்சியைப் பிடிக்கவும், பா.ஜ.க இந்த ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் மிகுந்த மெனக்கெடலில் உள்ளன.
இந்நிலையில், தேர்தல் நேரத்தில் பல நட்சத்திரங்கள் முக்கிய அரசியல் கட்சிகளில் இணைவதும், கட்சி தாவுவதும் வழக்கமான ஒன்று.
இதற்கிடையே சமீபமத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர். இவர் தமிழில் கமலுடன் இணைந்து ’இந்தியன்’ படத்தில் நடித்தார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஊர்மிளா 80-களில் புகழ்பெற்ற முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.
பின்னர் அவருக்கு வடக்கு மும்பை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிரில் நிற்பவர் பா.ஜ.க-வின் சிட்டிங் எம்.பி-யான கோபால் ஷெட்டி.
இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸிலிருந்து ஊர்மிளாவை சந்தித்தோம்.
மக்களவைத் தேர்தலில் மல்லுக்கட்டும் ’இன்னொரு நட்சத்திரம்’ என்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஒரு ‘கிளாமர் டால்’ நுழைந்திருப்பதாகத் தான் அனைவரும் நினைக்கிறார்கள். இது எனக்கு நல்லது தான். என்னைப் பற்றி அவர்கள் குறைவாக நினைக்கும் போது, அதற்கு எதிராக என்னால் செயல்பட முடியும். வார்த்தைகளை விட செயல்கள் உரக்கப் பேசும் என நம்புகிறேன். மாற்றத்தை உருவாக்க, நீ முதலில் மாறு என காந்திஜி சொன்னது போல், நான் மாறியிருக்கிறேன்.
அரசியல் ஏன்? குறிப்பாக காங்கிரஸ் எதனால்?
கடந்த 5 ஆண்டுகளில் நிறைய இடத்தில் நாம் குரல் கொடுக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன், ஆனால் முடியவில்லை. என்னுடைய துறையில் இருப்பவர்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.
மக்கள் பலர் ஆன்டி - இந்தியன் என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். வேறு நாட்டுக்கு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கேட்கப்பட்டால், அவர்களின் தேச பக்தியைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் பயங்கரமான விஷயங்களாக இவற்றை நான் கருதுகிறேன்.
மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக ஒருவரை அடித்துக் கொன்ற கும்பலுக்கு இடையே நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நாட்டை சீரமைப்பதற்கு பதில் அவர்களது பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான அரசியல் சூழலில் முக்கியமான முடிவெடுப்பது நமது கடமை. நான் இங்கு பதவிக்காக வரவில்லை. என்னைப் போன்ற ஒத்த கருத்துடைய கட்சியில் இப்போது நான் இணைந்திருக்கிறேன்.
ஒரு கட்சி, சாதி, மத, இன அடிப்படையில் மக்களை பிரிக்க முயற்சிக்கிறது. ஆனால் எங்களுக்கு அர்ப்பணிப்புள்ள தலைவர் (ராகுல் காந்தி) இருக்கிறார். உங்களுக்கான பதில் அவரிடத்தில் உள்ளதாக அவர் சொல்லவில்லை, முதலில் உங்களது பிரச்னைகளை காது கொடுத்துக் கேட்டு, பின்பு அதனை தகுந்தவரிடம் எடுத்துச் சென்று அதனை சரி செய்வார்.
வடக்கு மும்பையின் முக்கியப் பிரச்னைகள்?
குடிசைகளை சீரமைப்பது தான் முதல் வேலை. அடுத்ததாக லோக்கல் ட்ரெயின்களை மேம்படுத்த வேண்டும். ரயில் நிலையங்களை சீரமைத்து நிறைய ரயில் சேவைகளை உருவாக்க வேண்டும். அடுத்ததாக பெண்கள் ஆரோக்கிய மையம்.
அடிப்படை உடல்நல பராமரிப்புக்குக் கூட பணம் இல்லையா? இங்கு நான் வென்றாலும் தோற்றாலும், மருத்துவர்களை அழைத்து வந்து அடிப்படை மருத்துவ உதவிகளையும் ஆரோக்கிய நலனுக்காக மேற்படி விஷயங்களையும் கட்டாயம் செய்வேன்.
உங்கள் தொகுதியின் எதிராளர் கோபால் ஷெட்டியின் பிரச்சாரம் எப்படி?
அவருடைய பிரச்சார வண்டியை சுற்றிப் பார்க்கிறேன். அனைத்தும் குஜராத்தியில் எழுதப்பட்டுள்ளது. நார்த் மும்பையில், மகாராஷ்டிரியன்கள், உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் குஜராத்திகள் என அனைவரும் இருக்கிறார்கள். இது அனைவருக்குமான இடம். நீங்கள் மக்களை பிரிக்க முடியாது. அவர்களை மராத்தி-குஜராத்தி என பிரிக்க யார் நீங்கள்?
முஸ்லிம் மதத்தவரை மணந்ததற்காக ட்ரோல் செய்யப்பட்டீர்களே?
இது வெறுப்பு அரசியலின் பழி வாங்குதல். கடந்த 5 ஆண்டுகளில் ஏற்படாத முன்னேற்றத்தைப் பற்றி பேச யாரும் முன் வரவில்லை. நம் கனவு நிறைவேறவே இல்லை. அவர்கள் பூமியில் நடக்கும் பிரச்னைகளை பேச மறுத்து, நிலவில் நடக்கும் நிகழ்வை அசைபோடுகிறார்கள். என்னை மதம் மாற சொல்லி என் கணவர் வீட்டார் என்னிடம் கூறவில்லை, நானும் மாறவில்லை. என் கணவர் பெருமைக்குரிய முஸ்லிம், நான் பெருமைக்குரிய இந்து. அது தான் நம் நாட்டிற்கும், எங்களது இல்வாழ்க்கையிலும் அழகு சேர்க்கிறது. அவர்கள் முஸ்லிமை ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்குள் அடைக்கவும், என்னை சந்தேகிக்கவும் முயல்கிறார்கள். ஆனால் நான் எனது சிந்தனையில் தெளிவாக இருக்கிறேன்.
கட்டுரை - சஞ்சனா பலேராவ், அபா கொராடியா.