புதுச்சேரியில் உள்ள கரிக்கலாம்பாக்கத்தில் தரமற்ற சாலையாக அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்து சமூக ஆர்வலர் நடுரோட்டில் தனது பைக் நிறுத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தில் ரூ.4.47கோடி செலவில் கரிக்கலாம்பாக்கம் முதல் ஏம்பலம் சந்திப்பு வரையில் 4.5 கிலோ மீட்டர் துாரத்திற்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. டெண்டர் பரிந்துரைபடி, சாலை அமைக்காமல் தரமற்ற சாலையாக அமைக்கப்படுவதாக கரிக்கலாம்பாக்கம் இளைஞர்கள் சார்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முன்பே புகார் தெரிவித்தனர். இதனால் தார் சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக நிறுத்திவைக்கப்பட்ட சாலையை அமைத்தனர். இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ஜானகிராமன் மகன் தணிகாச்சலம்(35). நேற்று காலை 9:30 மணியளவில் தனது ஹோண்டா ஷைன் பைக்கை (பிஒய்01 .ஏபி.3124) கரிக்கலாம்பாக்கம் நான்கு ரோடு சந்திப்பு மையப்பகுதியில் நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
இதனையறிந்த கரிக்கலாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜானகிராமனை கைது செய்தனர். மத்திய அரசு நிதியில் இருந்து அமைக்கப்படும் கரிக்கலாம்பாக்கம் கிராம சாலை சரிவர அமைக்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் துணையோடு தரமற்றதாக அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்து பைக் எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"