நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதித்து லுக் அவுட் நோட்டீஸ் (எல்.ஓ.சி) பிறப்பித்துள்ளதால், மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நாட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டார். சுகேஷ் சந்திரசேகர் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக இவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டபோது, அவர் ஒரு நிகழ்ச்சிக்காக துபாய் செல்ல விரும்பினார். விசாரணைக்காக அவர் இப்போது டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று அமலாக்கத்துறை இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன.
200 கோடி பணமோசடி வழக்கு தொடர்பாக சுகேஷ் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சுகேஷ், திகார் சிறையில் இருந்தபோது, தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சுகேஷ் மற்றும் பெர்னாண்டஸ் இடையே பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை கண்டுபிடித்ததாக அமலாக்கத்துறை இயக்குனரகம் முன்பு குற்றம் சாட்டியது. மேலும் சுகேஷ் மூலம் அவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் குற்றம் சாட்டியது. ஜாக்குலின் பெர்னாண்டஸைத் தவிர, நடிகை நோரா ஃபதேஹியையும் விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை இயக்குனரகம் அழைத்திருந்தது.
இந்த வழக்கில் இன்னும் விசாரணை நடந்து வருவதாகவும், இந்த வழக்கு தொடர்பாக ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விசாரணை நடக்கும் வரை, ஜாக்குலின் பெர்னாண்டஸ் நாட்டை விட்டு வெளியேறுவதை அமலாக்கத்துறை விரும்பவில்லை, அதனால், அமலாக்கத்துறை இயக்குனரகத்தால் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"