ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை சோனியாகாந்தி மன்னித்ததைப்போல, நிர்பயா குற்ற்வாளிகளை அவரது தாய் மன்னிக்க வேண்டும் எனக் கூறிய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை, அந்த குற்றவாளிகளுடன் சிறையில் அடையுங்கள் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஆவசேகமாக கூறியுள்ளார்.
டெல்லியில் 2012 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு வெளியே வீசப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய அடையாளத்தை வெளியிடக் கூடாது என்று அவருடைய பெயர் நிர்பயா என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
நிர்பயா பாலியல் பலாத்கார விவகாரம் இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியது தலைநகரே பாலியல் குற்றங்களுக்கு எதிராக திரண்டு போராடியது. இதன் விளைவாக குற்றவாளிகள் விரைவாக கைது செய்யப்பட்டார்கள். குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் 17 வயதே நிரம்பியவர் என்பதால் அவர் சிறார் குற்றவாளியாகக் கருதப்பட்டு அவர் சீர்திருத்தப் பள்ளியில் 3 ஆண்டுகள் இருந்தபின் விடுவிக்கப்பட்டார்.
நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிள் மற்ற 4 பேர்களான அக்ஷய் குமார் சிங், முகேஷ், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தொடர்ந்த கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் 4 பேருக்கும் வருகிற பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற திகார் சிறை நிர்வாகம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, மனித உரிமை செயல்பாட்டாளர் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறுகையில், “ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை சோனியா காந்தி மன்னித்ததைப் போல, அவரை முன்னுதாரணமாகக் கொண்டு நிர்பயா குற்றவாளிகளை அவரது தாய் மன்னிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்திரா ஜெய்சிங்கின் இந்த கருத்துக்கு நிர்பயாவின் தாய் மற்றும் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத் செய்தியாளர்களை சந்தித்தபோது, மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கின் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கங்கணா ரனாவத், “நிர்பயா குற்ற்வாளிகள் இருக்கும் சிறையில் அவர்களுடன் சேர்த்து இந்திரா ஜெய்சிங்கையும் 4 நாட்கள் சிறையில் அடையுங்கள். இவரைப்போன்ற பெண்களால்தான் கொலைகாரர்களும் கொடூரமானவர்களும் உருவாக்கப்படுகிறார்கள்” என பதிலளித்தார்.
நடிகை கங்கனா ரனாவத் தொடர்ந்து பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்.
அதே நேரத்தில், வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் நிர்பயா கொலைக்குற்றவாளிகள் குறித்து தெரிவித்த கருத்து விவாதமாகிவருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.