ஆந்திர மாநிலம், நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா அவருடைய சொந்த கட்சியினரே அவரை தாக்க முயற்சி செய்த வீடியோ வைரலாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. தமிழ் சினிமா மட்டுமில்லாமல், ரோஜா தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தபின்னர், ஆந்திரப் பிரதேச அரசியலில் ஈடுபட்ட ரோஜா, முதலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டார். இதையடுத்து, நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆன ரோஜா சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் பிரசாரம் செய்தார். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது அம்மாநில சட்டமன்றத்தில் ரோஜா கடுமையாக விமர்சனங்களை வைத்தார்.
கடந்த ஆண்டு ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது ரோஜாவுக்கு ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நகரி தொகுதி எம்.எல்.ஏவான ரோஜாவின் காரை முற்றுகையிட்டு அவரது கட்சியினரே தாக்க முயற்சி. தொகுதிப் பக்கம் ரோஜா தலைகாட்டவில்லை எனக்குற்றச்சாட்டு. சினிமா டூ அரசியல்.. கொஞ்சம் கஷ்டம்தான் போலையே.. #Roja #Attack #Nagari pic.twitter.com/RxnVwLau4w
— Mahalingam Ponnusamy (@mahajournalist) January 6, 2020
இந்த நிலையில், சித்தூர் மாவட்டம், கே.வி.புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம தலைமை செயலகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரோஜா அங்கே சென்றார். அப்போது அந்த ஊரை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகரான மண்டல ஒன்றியக் குழு உறுப்பினர் அம்முலுவின் ஆதரவாளர்கள் 200 பேர் ரோஜாவை தாக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரோஜாவை பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
ரோஜாவை சொந்தக் கட்சியினரே தாக்குதவற்கு என்ன காரணம், ரோஜாவுக்கும் அம்முலுவுக்கும் இடையே பிரச்னை நடந்து வருவதாகவும் அதன் விளைவாகவே அம்முலு ரோஜாவை தாக்க வந்தார் என்று கூறப்படுகிறது.
தன்னை தனது சொந்த கட்சியினர் தாக்க வந்தனர் என்ற செய்தியை ரோஜா மறுத்துள்ளார். தனது கட்சிக்கார்கள் தன்னை தாக்கவரவில்லை என்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர்தான் தாக்க முயன்றனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், எங்களுக்குள் பிரச்னை இருப்பது போல சித்தரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.