தமிழ், தெலுங்கு சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு மெல்ல விடைகொடுத்து ஆந்திர அரசியலில் தீவிரமாக களம் இறங்கினார். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். முந்தைய சந்திரபாபு நாயுடு ஆட்சியில், ஆந்திர சட்டப்பேரவையில் கடும் விமர்சனங்களை வைத்து சிம்ம சொப்பனமாக இருந்தார்.
இதையடுத்து, 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் நடைபெற்ற தேர்தலில், ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி அமைந்தது. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக 5 துணை முதல்வர்களை அறிவித்தார். அப்போதே நடிகை ரோஜா அமைச்சரவையில் இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது அமைச்சரவையில் மாற்றம் செய்ய முடிவெடுத்து அனைத்து அமைச்சர்களிடமும் ராஜினாமா கடிதம் கேட்டார். இதையடுத்து, ஆந்திர மாநில அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையில் புதிய அமைச்சர்களுக்கு ஆந்திர மாநில ஆளுநர் விஸ்வ பூசன் ஹரிச்சரண் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில், சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி தொகுதி எம்.எல்.ஏ-வாக உள்ள நடிகை ரோஜா இன்று ஆந்திர மாநில அமைச்சராக பதவியேற்றுகொண்டார். நடிகை ரோஜாவுக்கு விஸ்வ பூசன் ஹரிச்சரண் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட நடிகை ரோஜாவுக்கு அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர்.
மேலும், ஜெகன்மோகன் ரெட்டியின் புதிய அமைச்சரவையில், முந்தைய அமைச்சரவையில் இருந்த 11 அமைச்சர்களுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமல்லாமல், 13 புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அமைச்சரவையில் துணை முதல்வராக பதவி வகித்த அம்சத் பாஷா ஷேக் பெபாரி மற்றும் கே நாராயண சுவாமி ஆகியோர் மீண்டும் பதவியேற்றுள்ளனர்.
போட்சா சத்தியநாராயணா, பி ஆர் சி ரெட்டி, பி விஸ்வரூப், ஏ சுரேஷ் மற்றும் புக்கனா ராஜேந்திரநாத் போன்ற மூத்த அமைச்சர்களும் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
எஸ் அப்பால ராஜு, சி வேணுகோபால கிருஷ்ணா, ஜி ஜெயராம் மற்றும் டி வனிதா ஆகியோருக்கு சாதிக் கணக்கீடுகள் காரணமாக இரண்டாவது முறையும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
2019ல் அமைச்சரவையில் இடம் பிடிக்காஅமல் போன, மூத்த தலைவரான அம்பத்தி ராம்பாபு இந்த முறை அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.
குடிவாடா அமர்நாத், பி ராஜண்ணா டோரா, பி முத்யாலா நாயுடு, தாடிசெட்டி ராமலிங்கேஸ்வர ராவ், கே வி நாகேஸ்வரராவ், கே சத்தியநாராயணா, ஜே ரமேஷ், வி ரஜனி, எம் நாகார்ஜுனா, கே கோவர்தன் ரெட்டி, உஷா ஸ்ரீசரண் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“