நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9.30 மணியில் இருந்து நண்பகல் 12.30 மணி வரை அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த 24ம் தேதி, அங்குள்ள ஹோட்டல் பாத்ரூமில், பாத் டப்பில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து துபாய் போலீசார் திவீர விசாரணை நடத்தினர். சாவில் சந்தேகம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் 27ம் தேதி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீதேவியின் உடல் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இதையடுத்து துபாயில் இருந்து தனி விமானத்தில் நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அந்தேரியில் உள்ள ஸ்ரீதேவியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஸ்ரீதேவியின் உடலை பார்த்ததும் அவரது மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதைப் பார்த்த உறவினர்கள் தங்களை அறியாமல் அழுதனர். ஸ்ரீதேவியின் மகள்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்தனர். அதன் பின்னர் ஸ்ரீதேவியின் உடலுக்கு சடங்குகள் செய்யப்பட்டன.
இன்று காலை (28ம் தேதி புதன்கிழமை) ஸ்ரீதேவியின் உடல் அந்தேரி பகுதியில் உள்ள செலபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்துக்கு காலை 9.30 மணிக்கு கொண்டு வரப்படுகிறது. பகல் 12.30 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையுலக பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்பை போலீசார் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, பகல் 2 மணியளவின் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. மும்பை வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் அருகே உள்ள மயானத்தில் அவரது உடல் பிற்பகல் 3.30 மணி அளவில் தகனம் செய்யப்படுகிறது.
ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பொதுமக்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் திவீரமாக உள்ளனர்.