Supreme-court-of-india | gautam-adani: 2011 மற்றும் 2015 ஆண்டுகளுக்கு இடையில் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கு ரூ. 29,000 கோடி அளவுக்கு அதிகமாக மதிப்பீடு செய்ததாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக 40 நிறுவனங்களை வருவாய் புலனாய்வு துறை (Directorate of Revenue Intelligence -DRI) விசாரித்து வருகிறது.
இந்தப் பட்டியலில் அதானி எண்டர்பிரைஸ் மற்றும் அதானி பவர் உட்பட 6 அதானி குழுமத்தின் நிறுவனங்கள் உள்ளன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று அப்போது மறுப்பு தெரிவித்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Adani coal imports case in Supreme Court: DRI reiterates stand to resume probe
எச்சரிக்கை
இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டில், வருவாய் புலனாய்வு துறை இந்தியா முழுவதும் உள்ள கள அலுவலகங்கள் மற்றும் சுங்கத்துறை அலுவலகங்களுக்கு "இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் கொள்முதல் விலையை உயர்த்தும் முறை" குறித்து ஒரு பொதுவான எச்சரிக்கையை வெளியிட்டது. மேலும், "வெளிநாட்டில் பணத்தை சுழற்றுவது" மற்றும் "அதிக மின் கட்டண இழப்பீடு அடிப்படையில்" இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கு செயற்கையாக விலையை உயர்த்துவது போன்றவை குறித்தும் அதில் தெரிவித்தது.
இந்தோனேசிய நிலக்கரி நேரடியாக இந்தோனேசிய துறைமுகங்களில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டாலும், "சப்ளையர்களின் விலைப்பட்டியல்கள் சிங்கப்பூர், துபாய், ஹாங்காங், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் (யு.கே) போன்றவற்றில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடைநிலை நிறுவனங்கள் மூலம் செயற்கையாக விலையை உயர்த்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது நிலக்கரியின் மதிப்பை மேலும் உயர்த்துகிறது.
இடைநிலை நிறுவனங்கள் இந்திய இறக்குமதியாளர்களின் துணை நிறுவனங்களாகவோ அல்லது அவற்றின் முன்னணி நிறுவனங்களாகவோ இருக்கும் என தோன்றுகின்றன. பரிசோதனையின் படி சுமார் 50% முதல் 100% வரை நிலக்கரிக்கு அதிக மதிப்பீடு வழங்கப்பட்டு உள்ளது என்றும் வருவாய் புலனாய்வு துறை 2016ல் வெளியிட்ட எச்சரிக்கையில் தெரிவித்தது.
இங்கு தான் அதானி குழுமத்திற்கு எதிரான வருவாய் புலனாய்வு துறை வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (சி.இ.ஆர்.சி) நவம்பர் 2017ல் இந்தோனேசிய நிலக்கரி இறக்குமதியை அதானி பவர் அதிக விலைப்பட்டியல் செய்ததாகக் கூறப்படும் விசாரணையின் கண்டுபிடிப்புகள் விநியோக நிறுவனங்களிடமிருந்து பெற்ற இழப்பீட்டைப் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டியது. அதனால், அதானி குழுமம் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள விநியோக நிறுவனங்களிடமிருந்தும் இழப்பீடு தொகையைப் பெற்றுள்ளது.
கோட்பாட்டில், நிலக்கரியின் மிகை மதிப்பீடு உற்பத்தி செலவை உயர்த்துகிறது. இதன் காரணமாக சி.இ.ஆர்.சி அல்லது அந்தந்த மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் நிர்ணயிக்கப்பட்ட மின் கட்டணத்தை உயர்த்துகிறது. அதனால், நுகர்வோர் மின்சார நுகர்வுக்கு அதிக கட்டணம் செலுத்துகின்றனர்.
வழக்கு
இந்தோனேசிய நிலக்கரி இறக்குமதியை அதிகமதிப்பீடு செய்ததாக அதானி குழும நிறுவனங்களை விசாரிக்கும் போது, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளுக்கு வருவாய் புலனாய்வு துறை அனுப்பிய அனைத்து லெட்டர் ரோகேட்டரிகளையும் (எல்.ஆர்) மும்பை உயர் நீதிமன்றம் 2018 செப்டம்பரில் ரத்து செய்தது. இதனால், வருவாய் புலனாய்வு துறை உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
லெட்டர் ரோகேட்டரி என்பது வெளிநாட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட விசாரணையின் போது நீதித்துறை உதவியை கோரும் முறையான கோரிக்கையாகும்.
2020 ஜனவரியில் நடந்த முதல் விசாரணையில், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பிப்ரவரி 2020ல் நடந்த இரண்டாவது விசாரணையில், அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஒரு வாரத்திற்குப் பிறகு வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது, “பதிலளிப்பவரின் (அதானி) வழக்கறிஞர் மூலம் அனுப்பப்பட்ட கடிதத்தைக் கருத்தில் கொண்டு, எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதை ஒத்திவைக்கக் கோரியது.
தொடர்ந்து அதானி குழுமம் டிசம்பர் 2021ல் எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய 22 மாதங்கள் எடுத்தது. வழக்கின் அடுத்த விசாரணைக்கு மேலும் 19 மாதங்கள் ஆனது. இறுதியாக இந்த ஜூலையில் உச்ச நீதிமன்றம் வருவாய் புலனாய்வு துறையிடம் "மறுபிரமாணப் பத்திரம் மற்றும் ஆவணங்களுடன் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்" எனக் கேட்டு, அக்டோபர் 10 ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட்டது.
அக்டோபர் 10 அன்று, வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகளா, குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்வதற்கு முன் சுங்கச் சட்டம், 1962 பிரிவு 133 முதல் 135 வரை எஃப்ஐஆர் பதிவு செய்வது கட்டாயமா என்பது உள்ளிட்ட இரண்டு கேள்விகளை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இரண்டு விஷயங்களையும் உரிய பெஞ்ச் முன் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நவம்பர் 10 ஆம் தேதி, உச்ச நீதிமன்ற பெஞ்ச் அடுத்தாண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.
வலியுறுத்தல்
இதற்கிடையில், அக்டோபர் 10 ஆம் தேதி வருவாய் புலனாய்வு துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், நிலக்கரி இறக்குமதியை அதிகமதிப்பீடு செய்ததாக அதானி குழுமத்தின் மீதான விசாரணையை மீண்டும் தொடங்குவதற்கான தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், சிங்கப்பூரில் வழக்கு தொடர்பான சில ஆவணங்களைப் பாதுகாப்பதற்காக லெட்டர் ரோகேட்டரியை வழங்குவதற்காக மும்பை நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததில் சரியான செயல்முறையைப் பின்பற்றியுள்ளதாவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 நவம்பரில், அதானி குழுமத்திற்கு ஆதரவாக மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து வருவாய் புலனாய்வு துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு 4 ஆண்டுகளில் 5 முறை விசாரிக்கப்பட்டு இன்னும் இறுதி வாதத்தின் கட்டத்தை எட்டாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
வருவாய் புலனாய்வு துறை தனது சமீபத்திய வாக்குமூலத்தில், அதானி குழுமம் தொடர்பாக போலியான குற்றச்சாட்டுகளுடன் உச்சநீதிமன்றத்தை அணுகவில்லை என்றும், அலைக்கழிக்கப்பட வேண்டிய விசாரணையாக இருந்திருந்தால், இந்தியா மற்றும் சிங்கப்பூர் நீதிமன்றங்கள் முதலில் மனுதாரரின் வேண்டுகோளின் பேரில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முற்றிலும் நிராகரித்திருக்கும் என்றும் தெரிவித்தது.
மாறாக, ஆகஸ்ட் 2016ல், மும்பை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் வழங்கிய லெட்டர் ரோகேட்டரியின் படி, சிங்கப்பூரின் அட்டர்னி ஜெனரல் சேம்பர் (AGC) சிங்கப்பூர் மாநில நீதிமன்றத்தில் விண்ணப்பங்களைச் செய்து, அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட், சிங்கப்பூர் (AGPTE) மற்றும் சிங்கப்பூரில் உள்ள பிற குழு/தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராக 6 உத்தரவுகளைக் கோரியது.
அதேபோல், சிங்கப்பூரின் அட்டர்னி ஜெனரல் சேம்பர் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்து, அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட்டின் 20 வங்கிகளுக்கு எதிராக 20 உத்தரவுகளைப் பெற்றது. இந்த உத்தரவுகள் அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட், அதன் குழு/தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு 2017 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன என்றும் வருவாய் புலனாய்வு துறை தெரிவித்தது.
பரிவர்த்தனை தொடர்பான தகவல்களைச் சமர்ப்பிப்பதில் அதானி குழும நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கிகள் ஒத்துழைக்காததால், விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை வருவாய் புலனாய்வு துறையால் முழுமையாகப் பெற முடியவில்லை என்றும், அதனால்தான், "இந்த ஆவணங்களை லெட்டர் ரோகேட்டரி கருவி மூலம் மட்டுமே பெற முடியும் என்பது கட்டாயமாக உணரப்பட்டது" என்று வருவாய் புலனாய்வு துறை கூறியது.
விசாரணை முற்றிலும் இணக்கமாக உள்ளது. இந்த வழியைப் பின்பற்றுவதற்கான அனுமதி நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்டது," என்று வருவாய் புலனாய்வு துறை தாக்கல் செய்த 25 பக்க பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.