நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு எதிராக அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது, லண்டனில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு மன்னிப்பு கேட்கக் கோரி, அதானி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கக் கோரி எதிர்க்கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் குழு புதன்கிழமை அமலாக்க இயக்குனரக தலைமை அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால், நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த அவர்களை டெல்லி போலீசார் விஜய் சவுக்கில் தடுத்து நிறுத்தினர்.
இந்த போராட்டத்தில் 18 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் இருந்து இ.டி தலைமை அலுவலகத்திற்கு பேரணியாக செல்லும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை அதானி விவகாரத்தில் மீண்டும் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதானி முறைகேடு விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவே ராகுல் காந்தி மீதான அரசாங்கத்தின் ஆக்ரோஷமான தாக்குதல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த பேரணியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளின் பேரணியில் ஒரு பகுதியாக இல்லை. அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் தொழிலதிபர் கெளதம் அதானிக்கு அரசு ஆதரவளித்த குற்றச்சாட்டுகள் குறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜே.பி.சி) விசாரணையை அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை.
இந்த பேரணியை காங்கிரஸ் கட்சித் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ராஜன் சவுத்ரி, சி.பி.ஐ-யின் பினாய் விஸ்வம், சி.பி.எம் கட்சியின் எளமரம் கரீம், தி.மு.க.வின் டி.ஆர். பாலு, சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சிவசேனாவின் சஞ்சய் ராவத் மற்றும் பி.ஆர்.எஸ் கட்சியின் கே. கேசவ ராவ் ஆகியோர் வழிநடத்தினார்கள்.
“நாங்கள் அனைவரும் அமலாக்க இயக்குநரகத்திற்குச் செல்கிறோம், ஆனால் அரசாங்கம் எங்களைத் தடுத்துள்ளது. நாங்கள் பேரணி நடத்துவதை அரசாங்கம் விரும்பவில்லை. ஒரு நபர் எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ மற்றும் பிற வங்கிகளை அழித்துள்ளார். மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இந்த நிறுவனங்களில் நம்பிக்கையுடன் டெபாசிட் செய்துள்ளனர். ஆனால், அவர்களின் பணம் அனைத்தும் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
அதானி குழுமம் அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் அனுசரணையுடன் சொத்து குவிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். “அது நடந்தது எப்படி? யார் பொறுப்பு? அவருக்கு பணம் கொடுப்பது யார்? அவர் எப்படி இவ்வளவு பணம் சம்பாதிக்க அனுமதிக்கப்படுகிறார்… எனவே, விசாரணை நடத்த வேண்டும். விசாரணை நடத்தப்பட வேண்டும்… பிரதமருக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு… அவர் எங்கே செல்கிறார், அவரை எங்கே அழைத்துச் செல்கிறார்” என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
அவரையும் மற்ற தலைவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தியது குறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், அரசாங்கம் ஜனநாயகத்தைப் பற்றி உயர்த்திப் பேசும் அதே வேளையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் அமைதியான போராட்டத்தை நிறுத்திவிட்டது என்றார். “நாங்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபடவில்லை, இது அமைதியான போராட்டம்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“