மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக மேற்குவங்கத்தை சேர்ந்த மூத்தத் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிர் ரஞ்சன் சௌத்ரி, பெங்காலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரே காங்கிரஸ் எம்.பி. ஆவார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், காங்கிரஸ் 51 இடங்களை மட்டுமே வென்றதால், தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் பெற தவறியுள்ளது. மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மக்களவை காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்தார். இந்தமுறை அவர் தேர்தலில் தோல்வியை தழுவியதால், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கட்சியின் மூத்த எம்.பி. அதிர் சௌத்ரி, மற்றொரு மூத்த எம்.பி. கோடிக்குன்னில் சுரேஷ், மற்றும் கேரளாவைச் சேர்ந்த சஷி தரூர் ஆகியோரும் காங்கிரஸ் மக்களவை தலைவர் போட்டிக்கான ரேஸில் இருந்தனர்.
இந்நிலையில், அதிர் ரஞ்சன் சௌத்ரி காங்கிரஸ் கட்சியின் புதிய மக்களவை தலைவராக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரஞ்சன் சௌத்ரி 5 -வது முறையாக மக்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார். அவையில் நீண்ட காலம் அவருக்கு நல்ல அனுபவம் உண்டு என்ற அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
'ஒரே தேசம் ஒரே தேர்தல்' தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த முறையை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நடைமுறையிலும், தர்க்க ரீதியிலும், சட்ட முறையிலும் நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.