புதுச்சேரியில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது தவறான முன்னுதாரணம் என அதிமுக கண்டித்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “கல்வித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்பணியிட மாறுதலில் (Transfer Policy)-யில் முடிவெடுக்கும் போது அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
அரசு துறையில் பணிபுரியும் அனைவருக்கும் பாரபட்சமற்ற சம உரிமை வழங்கும் விதத்தில் பணியிட மாறுதல் அமைக்க வேண்டும்.
தற்போது ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் பல்வேறு பேச்சுவார்த்தைக்கு பிறகு எடுக்கப்பட்ட பணியிட மாறுதல் பிரச்னைக்கு உள்படமாட்டோம் என ஆசிரியர்கள் தங்களின் எதிர்ப்பை பல்வேறு விதங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
கல்வித்துறை முற்றுகை, முதல்வர் வீடு முற்றுகை, சாலை மறியல் என விரும்பத்தகாத ஒழுங்கீன செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுவது தவறான ஒன்றாகும்.
மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்கத்தை கற்றுகொடுக்கும் ஆசிரியர் பெருமக்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது ஏற்புடையது அல்ல. இருந்தாலும் அரசின் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
பல ஆசிரியர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக கிராமப்புறங்களிலும், 5 ஆண்டுகளுக்கு மேலாக காரைக்காலிலும் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால் நகரப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் பணி செய்து வருகிறார்கள்.
3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், காவல்துறையை சேர்ந்த ஐ.பி.எஸ், எஸ்.பி., ஆய்வாளர்கள், மருத்துவர்கள் பணி செய்ய முடியாத நிலை இருக்கும் போது, ஆசிரியர்கள் விவகாரத்தில் இதுவரை அரசு பாராமுகமாக இருந்தது தவறான ஒன்றாகும்.
அதே போல் பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பணி செய்யாமல் டெப்புடேஷன் முறையில் மற்ற இடங்களில் பணி செய்ய அனுமதித்திருப்பதை அரசு உடனடியாக நீக்கம் செய்து டெப்புடேஷனில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் பள்ளிக்கு சென்ற ஆசிரியர் பணி செய்ய உத்தரவிட வேண்டும்.
எனவே காரைக்காலிலும், புதுச்சேரி கிராம்ப்பகுதிகளிலும் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு உடனடியாக ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றத்தை பாரபட்சமற்ற முறையில் அரசு அமல்படுத்திட வேண்டும்.
இதில் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உறுதியான நிலைபாட்டை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“