புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் உப்பளம் டாக்டர் அம்பேத்கார் சாலையை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “புதுச்சேரி நகரப்பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் போடப்படும் சாலைகள் தரம் குறைந்து காணப்படுகின்றன.
இதனால் புதியதாக போடப்படும் சாலைகள் ஓரிரண்டு வருடத்திலேயே சாலை முழுவதும் ஆங்காங்கே பெயர்ந்து சேதமடைந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பகல் நேரங்களில் சாலை போடுவதை தவிர்த்து தற்போது இரவு நேரங்களில் சாலைகள் போடப்படுகின்றன.
இரவு நேரங்களில் போடப்படும் சாலைகள் தரம் குறைந்து போதுமான தார் மற்றும் ஜல்லிகள் கலக்கப்படாமல் போடப்படுகின்றன.
இரவு நேரங்களில் சாலை போடும் பணிகள் நடைபெறுவதால் பொதுப்பணித்துறையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கண்காணிப்பில் சாலை போடும் பணிகள் நடைபெறவில்லை.
உப்பளம் டாக்டர் அம்பேத்கர் சாலை நகரின் மிக முக்கியமான பிரதான சாலையாகும். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தரமாக போடப்பட்ட இந்த சாலை அரசின் கேபிள் புதைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சாலைகள் ஆங்காங்கே உடைக்கப்பட்டது.
பல கோடி ரூபாய் செலவு செய்து போடப்படும் சாலைகளை எந்தவிதமான தொலை நோக்கு சிந்தனையும் இல்லாமல் அடுத்த 6 மாதத்திலேயே கேபிள் புதைப்பது, குடிநீருக்காக குழாய் புதைப்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக சாலைகள் உடைக்கப்படுகின்றது.
இதனால் ஆண்டு தோறும் பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு திட்டமிட்டு இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஒரு சாலை போடப்பட்டால் அதில் குறைந்தது 3 ஆண்டுகாலத்திற்கு எந்த ஒரு திட்டத்திற்காகவும் சாலைகளை உடைக்க அரசு அனுமதிக்க கூடாது.
ஆனாலும் சரியான திட்டமிடுதல் இல்லாததால் புதியதாக போடப்படும் சிமெண்ட் சாலைகள், தார் சாலைகள் ஓராண்டிற்குள் பல்வேறு பணிகளுக்காக உடைப்பதற்கு அந்தந்த துறையில் உள்ள சில உயரதிகாரிகள் அனுமதிப்பது சட்டவிரோதமான செயலாகும்.
கடந்த 29-ம் தேதி இரவு நேரத்தில் இந்த சாலை போடப்படும் போது அரசு துறையின் எந்த அதிகாரியும் அங்கு கண்காணிப்பில் இல்லை. சாலை போடும் பணியை எடுத்த ஒப்பந்ததாரர் முக்காள் ஜல்லியுடன் போதுமான தார் கலக்கப்படாமல் சாலை போடும் பணியை செய்துள்ளார்.
இதனால் மறுநாள் காலை அந்த சாலை வழியாக சென்ற 4 சக்கர வாகனங்களால் அந்த சாலை பெயர்ந்து சேதமடைந்துள்ளது. பல இரு சக்கர வாகனங்கள் வழுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர்.
பொதுமக்களின் எதிர்ப்பால் மறுநாள் காலையில் மீண்டும் அந்த சாலை போடும் பணியை ஒப்பந்ததாரர்கள் சரி செய்துள்ளனர்.
5 சென்டிமீட்டர் உயரத்திற்கு உப்பளத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சாலையில் தார் சாலை போடுவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 5 சென்டிமீட்டர் என்பது சாதாரண உள்ளுரில் செல்லக்கூடிய சாலைகளின் அளவாகும். தற்போது பிரதான சாலையான டாக்டர் அம்பேத்கர் சாலையில் 5 சென்டிமீட்டர் உயரத்திற்கு தார் சாலை அமைப்பது ஒரு வருடத்திற்கு கூட அந்த சாலை தாங்காது.
அதுவுமில்லாமல் ஒப்பந்ததாரர் 5 சென்டிமீட்டர் உயரத்திற்கு தார் சாலையை போடுகிறாரா என்பதை கூட பொதுப்பணித்துறையின் உயரதிகாரிகள் கண்காணிப்பதில்லை.
எனவே இந்த தார் சாலை போடும் பணியில் நடைபெற்று உள்ள முறைகேடுகளை பொதுப்பணித்துறையின் முதன்மை அதிகாரி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தற்போது நடைபெறும் இந்த சாலை பணியை பொதுப்பணித்துறையின் முதன்மை அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் நடத்த வேண்டும்.
தற்போது போடப்பட்டு வரும் இந்த சாலை தரமற்ற முறையில் தார் ஜல்லிகள் கலக்கப்பட்டள்ளதாக தெரிகிறது. இதன் மீது உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.