அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதற்கான ஒப்புதல் அதிமுக பொதுக் குழுவில் பெறப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உடன்படவில்லை எனில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கே.சி. பழனிச்சாமி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்திருந்தார். அதில் 'அதிமுக பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும். இருவரும் இணைந்து கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கம் செய்து எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்' என கூறி இருந்தார்.
அந்த வழக்கு நீதிபதி காமேஸ்வரராவ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் புகார் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.