புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் கடந்த 25 நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து அ.தி.மு.க சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியின் பிராந்தியமான ஏனாம், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ளது. ஏனாம் பிராந்தியத்தில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் கனகலாப்பேட் என்ற பகுதியில் தனி இடம் ஒதுக்கப்பட்டு கொட்டப்பட்டு வந்தது. இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படுவதாக கூறி இதனை மூட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாசா அசோக் தலைமையில் கடந்த 25 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதனால் குப்பை கொட்டும் மையம் மூடப்பட்டுள்ளது.
குப்பை கொட்ட இடமில்லாத காரணத்தினால் கடந்த 25 நாட்களாக ஏனாமில் உள்ள குப்பைகள் அனைத்தும் அந்தந்த வீதிகளிலேயே கொட்டப்படுகிறது. இதனால் ஏனாமின் அனைத்து சாலைகளிலும் குப்பை குவிந்துள்ளது. அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டித்து ஏனாமில் பந்த் போராட்டத்திற்கு அ.தி.மு.க அழைப்பு விடுத்தது. இதன் அடிப்படையில் ஏனாமில் இன்று காலை 6 மணி முதல் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. மதுபான கடைகள், பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன.
கனகலாப்பேட் குப்பை கொட்டும் மையம் மூடப்பட்டாதால் கடந்த 25 நாட்களாக குப்பைகள் வாரப்படவில்லை. குப்பை போடுவதற்கு முறையான இடத்தை அரசு தேர்வு செய்து குப்பை கொட்டும் மையத்தை அமைக்க வேண்டும் என ஏனாம் அ.தி.மு.க செயலாளர் சாய்குமார் வலியுறுத்தியுள்ளார்.