இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே அத்வானி செவ்வாய்க்கிழமை 95 வயதை எட்டிய நிலையில், நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க தலைவர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களில் பலர் அவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டனர். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க வாழ்த்து தெரிவித்துள்ளனர். அத்வானிக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி அத்வானியின் இல்லத்தில் அவருடடன் இருக்கும் புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார். அதில், “இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. அவரது தொலைநோக்கு மற்றும் அறிவாற்றலுக்காக இந்தியா முழுவதும் மதிக்கப்படுகிறார். பா.ஜ.க.வை கட்டியெழுப்பியதிலும், வலுப்படுத்துவதிலும் அவரது பங்கு ஈடு இணையற்றது. அவரது நீண்ட ஆயுளுடனும்ம் ஆரோக்கியத்துடனும் இருக்க பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்ட ட்வீட்டில், “ஒருபுறம் அத்வானி அமைப்பை பலப்படுத்தினார், மறுபுறம், அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது நாட்டின் வளர்ச்சிக்கு மதிப்புமிக்க பங்களிப்புகளை செய்தார்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, முன்னாள் பா.ஜ.க தலைவர் அத்வானியை உத்வேகத்தின் ஆதாரம் என்று அழைத்தார்.
அத்வானியை சந்தித்த ராஜ்நாத் சிங், நாட்டின் உயரிய ஆளுமைகளில் ஒருவர் என்று கூறினார். “அவர் (அத்வானி) நாடு, சமூகம் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பயணத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளார்” என்று ராஜ்நாத் சிங் ட்வீட் செய்து அத்வானியுடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
கறுப்புப் பணத்துக்கு எதிராக அத்வானி மேற்கொண்ட ஜன் சேத்னா யாத்திரையின் தாக்கத்தை நினைவுகூர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்த உறுதிமொழியை முன்னெடுத்துச் செல்லும், பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்” என்று ட்வீட் செய்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் எஸ் ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி மற்றும் கிரண் ரிஜிஜு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவகவுடா, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடு மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி ராஜ்யசபா எம்பி விஜயசாய் ரெட்டி ஆகியோர் அத்வானிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் தனது விருப்பங்களை வெளிப்படையாக வைத்துள்ளது. கர்நாடகாவில் அக்கட்சி மீண்டும் கிங் மேக்கராக செயல்படும் என்று அக்கட்சி நம்புகிறது. அதே நேரத்தில், ஆந்திராவில் டி.டி.பி மற்றும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆகிய இரண்டும் பா.ஜ.க உடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகின்றன.
தற்போது பா.ஜ.க-வுக்கு எதிராக திரும்பியுள்ள பழைய அத்வானி கூட்டாளியான சுதீந்திர குல்கர்னி பதிவிட்ட ட்வீட்டில்: மதிப்பிற்குரிய ஸ்ரீ எல்.கே அத்வானி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அத்வானி ஜி தனது 95வது பிறந்தநாளில். இந்திய அரசியலை சிறப்பாக மாற்றிய தலைவர். அவருடைய வாழ்க்கையும் போராட்டங்களும் எனக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறது. அவரும் அடல் பிஹாரி வாஜ்பாயும் எனக்கு அரசியலைப் பார்க்கவும் நடைமுறைப்படுத்தவும் கற்றுக் கொடுத்தனர்.” என்று தெரிவித்துள்ளார்.
உத்தவ் சிவசேனா தலைவர் மிலிந்த் நர்வேகர் கூறுகையில், “எங்கள் தேசத்திற்கான உங்கள் (அத்வானி) அர்ப்பணிப்பு மற்றும் சேவை ஒரு நித்திய உத்வேகம்.” என்று கூறினார். என்.சி.பி எம்.பி சுப்ரியா சுலேவும் எல்.கே. அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“