ஏரோ இந்தியா 2019 : ஆசிய பிராந்தியத்தின் மிகப் பெரிய விமான கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில், பெங்களூரில் நடப்பது வழக்கம். 1996ம் ஆண்டில் இருந்து விமான கண்காட்சியும் சாகச நிகழ்வுகளும் பெங்களூரில் இருக்கும் யெலஹன்க்கா ஏர்பேஸ் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இம்முறை பெங்களூருக்கு பதிலாக வட இந்தியாவில் இந்த நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
ஏரோ இந்தியா 2019 இடமாற்றம்
மத்திய அரசு இந்த கண்காட்சியினை நடத்துவதற்காக குஜராத்தில் இருக்கும் நலியா ஏர்பேஸ் (புஜ்) மற்றும் உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் ஹிண்டன் ஏர்பேஸ் - காசியாபாத் அல்லது ஆக்ராவில் இருக்கும் கேரியா ஏர்பேஸ் அல்லது லக்னோவில் இருக்கும் பக்சிக்கா தலாப் ஏர்பேஸில் நடத்துவது குறித்து பரிசீலனை செய்து வந்தது பிரதமர் அலுவலகம்.
ஆனால் இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அடுத்த வருடமும் இக்கண்காட்சி பெங்களூரில் நடைபெறும் என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்.
உலக நாடுகளின் தலைவர்கள், பெரிய விமான வர்த்தகர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பெரும் அளவில் கலந்து கொள்ள இருக்கும் இந்த விழாவானது பிப்ரவரி 20 முதல் 24ம் தேதி வரை பெங்களூரில் நடைபெற இருக்கிறது.