Jignasa Sinha , Divya Goyal
Afghanistan crisis : ஞாயிற்றுக்கிழமை காலை காபூலில் இருந்து இந்தியாவின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டோன் விமான தளத்திற்கு வந்த இந்திய விமானப்படை விமானம் சி-17-ல் இரண்டு ஆப்கானிய பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் 107 இந்தியர்கள் என மொத்தம் 168 பேர் பயணம் செய்துள்ளனர்.
வெளியான செய்திகள் படி, இந்த விமானத்தில் 24 ஆப்கான் நாட்டு சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் இரண்டு சிறுபான்மை எம்.பிக்கள் நரீந்தர் சிங் கால்சா மற்றும் அனார்கலி கௌர் ஹொனார்யார் ஆகியோர் பயணம் செய்து இந்தியா வந்தடைந்துள்ளனர்.
பி.டி.ஐ. -யிடம் பேசிய நரீந்தர் சிங் கால்சா, இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு. நாங்கள் தலைமுறை தலைமுறையாக ஆப்கானிஸ்தானில் வசித்து வருகின்றோம். விரைவில் ஆப்கானிஸ்தானில் நிலைமை சீராகும். நாங்கள் எங்களின் குருத்வாராக்களையும், கோவில்களுக்கும் செல்லவும், நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவைகள் செய்யவும் இறைவன் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன் என்றார்.
வீடியோ ஒன்றை வெளியிட்ட அனார்கலி கௌர், நான் இந்திய அரசு, இந்திய பிரதமர் மோடி, வெளிவிவகாரத்துறை, காபூலில் இருந்து எங்களை பத்திரமாக மீட்டு எங்களை காப்பாற்றிய இந்திய விமானப்படைக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
20 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் கொண்டு வரப்பட்ட அனைத்து வெற்றிகளும் காணாமல் போய்விட்டது. அங்கே ஒன்றும் இல்லை. அனைத்தும் அழிந்துவிட்டது என்று கால்சா தெரிவித்தார். எனக்கு அழுகையாய் வருகிறது. அனைத்தும் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறும் முடிவு மிகவும் கடினமாகவும், வலி நிறைந்ததாகவும் இருந்தது. இது போன்ற சூழலை நான் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டது. அனைத்தும் முடிந்துவிட்டது என்று அவர் கூறினார்.
காபூல் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள குருத்வாராக்களில் இந்தியர்கள் மற்றும் ஆப்கானிய சீக்கியர்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர் என்று கால்சா கூறினார்.
72 ஆப்கான் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் குருத்வாராவில் இருந்து காபூல் விமான நிலையத்த்திற்கு வந்த பிறகு இந்த மீட்புப் பணி வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பமானது. ஆனால் தாலிபான்கள் அவர்களை தடுத்து நிறுத்தி மீண்டும் குருத்வாவிற்கு அனுப்பிவிட்டனர். ஆனால் மறுபடியும் அவர்கள் காபூல் விமான நிலையத்திற்கு வர துவங்கினர். இரண்டு எம்.பிக்கள் உள்ளிட்ட பலர் இந்திய விமானப் படை விமானத்தில் பயணிக்க அனுமதி பெற்றனர்.
நாங்கள் ஆப்கான் குடிமக்கள் என்பதால் நேற்று நாங்கள் காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் போது எங்களை தாலிபான்கள் பிரித்தார்கள். நாங்கள் குழந்தைகளுடன் சென்றதால் தப்பித்தோம் என்று கால்சா கூறினார். ஒவ்வொரு விமான நிலைய நுழைவிலும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் நின்று கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் எங்களால் உள்ளே செல்ல முடியவில்லை. பிறகு 8 மணி அளவில் வி.ஐ.பி. நுழைவு வாயில் வழியாக நாங்கள் விமான நிலையத்திற்குள் சென்றோம் என்றும் அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் காபூலில் இருந்து கிளம்பும் வரை அடுத்து என்ன நடக்கும் என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. பல வாரங்களாக நாட்டில் இருந்து வெளியேறுவது குறித்து யோசித்திருந்தோம். நிறைய நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற காத்துக் கொண்டிருந்ந்தோம். ஒரு கணம், அவர்கள் எங்களை திருப்பி அனுப்புவார்கள், தாலிபான்கள் எங்களை அழைத்துச் செல்வார்கள் என்று நினைத்தோம். அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கும் முன் நாங்கள் பல மணிநேரம் காத்திருந்தோம். ஒரு வழியாக வீடு திரும்ப எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று இந்தியாவை சேர்ந்த ரவி கூறினார். காபூலில் அவர் ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. சமைக்கவோ ஒரு பொருளும் என்னுடைய வீட்டில் இல்லை. எங்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து தாலிபான்கள் எங்களை மிரட்டலாம் என்ற எண்ணமே அச்சம் தருவதாக இருந்தத். எங்களால் முடிந்த அளவு மக்களை நாங்கள் வாட்ஸ்ஆப் மற்றும் முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு பேசினோம் என்று கூறினார்.
நான் இங்கே என்ன செய்வேன் என்றே எனக்கு தெரியவில்லை. நான் ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகள் பணியாற்றினேன். எனக்கு அங்கே ஒரு வாழ்க்கை இருந்தது. ஆனால் இப்போது ஒன்றும் இல்லை என்று தொழில் அதிபர் ராஜீவ் மாலிக் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இந்திய குடிமக்களை வெளியேற்றுவதற்கு ஒரு நாளைக்கு இரண்டு விமானங்களை அனுமதிப்பதற்கு அமெரிக்க பாதுகாப்புப் படைகளுடன் வெளியுறவு அமைச்சகம் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. மீதமுள்ள ஆப்கான் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அங்குள்ள குழப்பம் காரணமாக காபூல் விமான நிலையத்தை அணுகுவது என்று ஒரே ஒரு பிரச்சனை மட்டுமே உள்ளது என்று உலக பஞ்சாபி அமைப்பு தலைவர் விக்ரம்ஜித் சிங் சஹ்னி கூறினார்.
திங்கள் அல்லது செவ்வாய்கிழமை அன்று 185 ஆப்கான் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை மீட்கும் பணி நடைபெறும் என்று நம்பப்படுகிறது. காபூலில் இருந்து தனது குடிமக்களை வெளியேற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை இந்தியா தனது குடிமக்கள் 329 பேர் உட்பட கிட்டத்தட்ட 400 பேரை மூன்று வெவ்வேறு விமானங்களில் அழைத்து வந்தது.
IAF விமானத்தில் தஜிகிஸ்தான் தலைநகருக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, 87 இந்தியர்கள் மற்றும் இரண்டு நேபாள நாட்டவர்கள் துஷான்பேயில் இருந்து சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் அவர்கள் இந்தியா அழைத்துவரப்பட்டனர். தனித்தனியாக, கடந்த சில நாட்களில் 135 இந்தியர்கள் காபூலில் இருந்து தோஹாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ விமானங்கள் மூலம் சிறப்பு விமானத்தில் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.