Nirupama Subramanian
Afghanistan crisis Afghan woman MP Rangina Kargar : காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய ஐந்து நாட்கள் கழித்து, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறங்கினார். ஆனால் ஆகஸ்ட் 20ம் தேதி அன்றே அவர் டெல்லியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
ஃபர்யாப் மாகாணத்தின் மக்களவை உறுப்பினராக பணியாற்றி வந்தவர் ரங்கீனா கர்கர். ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அன்று துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் இருந்து டெல்லிக்கு ஃப்ளை துபாய் விமானம் மூலம் வந்தார். இந்தியாவுடன் பரஸ்பர ஏற்பாட்டின் கீழ் விசா இல்லாத பயணத்தை எளிதாக்கும் வகையில் அவரிடம் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் இருந்தது.
இந்நிகழ்வுக்கு ஒரு நாள் முன்பு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், இந்தியாவின் கவனம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்கான் மக்களுடனான வரலாற்று உறவைப் பாதுகாப்பதில் இருக்கும் என்று மேற்கோள் காட்டி கூறினார்.
கர்கர் 2010ம் ஆண்டில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இதே பாஸ்போர்ட்டை வைத்து இந்தியாவிற்கு அவர் பலமுறை பயணம் மேற்கொண்டிருப்பதை இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அவர் தெரிவித்தார். இதற்கு முன்பும் இவ்வாறு அலைக்கழிக்கப்பட்டுள்ளேன். ஆனால் இம்முறை இமிக்ரேஷன் அதிகாரிகள் காத்திருக்கும் படி கேட்டுக் கொண்டதாக கூறினார். மேலும் தங்களின் மேல் அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு பதில் கூறுகிறோம் என்றும் கூறியுள்ளனர்.
இரண்டு மணி நேரம் கழித்து, அவர் வந்த அதே விமானத்தில் துபாய் வழியாக இஸ்தான்புல்லிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். துபாயில் கூட அவருடைய பாஸ்போர்ட்டை அவருக்கு திருப்பித் தரவில்லை என்று கூறுகிறார் 36 வயதான கர்கர்.
அவர்கள் எனக்கு செய்தது நல்ல விஷயம் அல்ல. காபூலில் நிலைமை மோசமாக உள்ளது. இந்திய அரசு ஆப்கான் பெண்களுக்கு உதவும் என்று நம்பி நான் வந்தேன் என்று அவர் கூறினார். எதற்காக திருப்பி அனுப்பப்படுகிறேன் என்று அவர்கள் கூறவில்லை. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் அல்லது பாதுகாப்பு காரணங்களாக கூட இருக்கலாம் என்றும் அவர் கூறினார். கர்கரை திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்கர் டெல்லியை விட்டு வெளியேறிய இரண்டு நாட்களில் இந்தியா இரண்டு ஆப்கான் சீக்கிய எம்.பிக்கள் நரீந்தர் சிங் கால்சா மற்றும் அனார்கலி கௌர் ஹோனார்யார் ஆகியோரை வரவேற்றது. ஹோனார்யார் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் முதல் சீக்கிய பெண் எம்.பி. ஆவார். கர்கர் போன்று அல்லாமல், இந்திய அரசு நடத்திய மீட்பு நடவடிக்கைகள் மூலம் அவர்கள் இந்தியா கொண்டு வரப்பட்டனர்.
அதிபர் நாட்டை விட்டு வெளியேறியதும் அனைத்து நம்பிக்கையையும் இழந்துவிட்டோம் – ஆப்கான் எம்.பி. அனார்கலி
அந்த விமானங்கள் இந்தியர்களுக்கும் ஆப்கான் இந்தியர்களுக்குமானது. ஆப்கானியர்களுக்கானது அல்ல என்று கர்கர் கூறினார். தெற்கு டெல்லியில் காலை 11 மணிக்கு மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற வந்தேன். 22ம் தேதி அன்று இஸ்தான்புல் திரும்ப என்னிடம் ரிட்டர்ன் டிக்கெட்டும் இருந்தது என்று கூறினார் கர்கர்.
அவருடைய கணவர் ஃபஹீம் மற்றும் நான்கு குழந்தைகள் இஸ்தான்புல்லில் உள்ளனர். ஃபஹிம் கர்கர் ஆப்கானிஸ்தான் மக்களவை (Wolesi Jirga) தலைவராவார். அவரும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் ஜூலை மாதம் இஸ்தான்புல் சென்றனர்.
”காந்தியின் மண்ணில் நான் இதனை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இந்தியாவுடன் நல்ல நட்புறவில் இருந்துள்ளோம். இந்தியாவுடன் வரலாற்று தொடர்புகளும் இருக்கிறது. ஆனால் இது போன்ற ஒரு சூழலில் ஒரு பெண்ணை, நாடாளுமன்ற உறுப்பினரை இவ்வாறு நடத்தியுள்ளனர். விமான நிலையத்தில், உங்களுக்கு எங்களால் ஏதும் செய்ய முடியாது என்று கூறினார்கள்” என்று தெரிவித்தார் கர்கர்.
தர்கிக் இனக்குழுவை சேர்ந்த கர்கர் 1985ம் ஆண்டு மசர் - இ - ஷாரிஃபில் பிறந்தார். எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. தன்னை ஒரு பெண்கள் உரிமை செயல்பாட்டாளாராக அறிவித்துக் கொள்ளும் அவர், காபூலுக்கு இனி திரும்பி செல்ல முடியாது என்றும் அங்கு நிலைமை மாறிவிட்டது என்ற்ம் கூறினார். காபூலுக்கு செல்ல விமானங்கள் ஏதும் இல்லை என்பதால் அவர் இஸ்தான்புல்லில் தான் தங்கப் போவதாகவும், தாலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு இடம் கிடைக்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.