ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை மற்றும் பிராந்திய பாதுகாப்பில் அதன் தாக்கங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் மற்றும் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவின் தலைவர் வில்லியம் ஜே பர்ன்ஸ் ஆலோசனை நடத்தினர்.
ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொலைப்பேசி மூலம் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக 2 நாள் பயணமாக ரஷியா பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் கடந்த 7ஆம் தேதி இந்தியா வந்தார்.
புதன்கிழமை பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆப்கானிஸ்தானின் அரசியல் மற்றும் சமூக-பொருளாதார நிலைமை மற்றும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
ஆப்கானிஸ்தான் நிலைமை உட்பட பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான துறையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் தங்கள் நோக்கத்தை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும், பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது, பயங்கரவாத எதிர்ப்புப் பாதையில் செயல்படுவது, சட்டவிரோத இடம்பெயர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை எதிர்ப்பதற்கான நடவடிக்கை என விவாதித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி வந்துள்ள அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு தொடர்பாக விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய சூழ்நிலையில் பாதுகாப்பு விவகாரங்கள் இந்த சந்திப்பில் முக்கியமான ஆலோசனை நடத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது.
சிஐஏ தலைவர் வருகை பற்றி இந்திய மற்றும் அமெரிக்க தரப்பில் எந்த தகவலும் தரப்படவில்லை என்றாலும் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்கவே அவரது வருகை இருந்ததாக சந்திப்புகள் மற்றும் ஆதாரங்கள் உறுதிப்படுத்தின. அவர் பாகிஸ்தானுக்கும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முல்லா அப்துல் கனி பரதர் உள்ளிட்ட தலிபான் தலைவர்களைச் சந்திக்க வில்லியம் பர்ன்ஸ் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு சென்றிருந்தார். அமெரிக்கா வீரர்களை வெளியேற்றும் முயற்சிகளுக்கு சவாலாக இருந்த ஆபத்தான பாதுகாப்பு சூழ்நிலையின் பின்னணியில் சென்றிருந்தார்.
முன்னதாக அஜித் தோவல், ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலய் பத்ருஷேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஆப்கான் அரசியல் சூழ்நிலை, சீனா மற்றும் பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
ரஷ்ய அறிக்கையின்படி, பத்ருஷே மற்றும் தோவல் இடையேயான சந்திப்பில் இரு நாடுகளின் சிறப்பு சேவைகள் மற்றும் ராணுவ அமைப்புகளின் கூட்டுப் பணிகளை தீவிரப்படுத்துவதில் கவனம் செலுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான மற்றும் இடம்பெயர்வு பிரச்சனைகள், மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அமைதியான தீர்வு முறையை தொடங்குவதற்கான ரஷ்ய-இந்திய கூட்டு முயற்சிகளின் வாய்ப்புகள் ஆகியவை குறித்தும் பேசப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆப்கான் குடியேற்றத்தில் ரஷ்யா மற்றும் இந்தியாவின் அணுகுமுறைகளை பலதரப்பு வடிவங்களில் ஒருங்கிணைக்கவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டனர். ஆப்கானிஸ்தானின் எதிர்கால கட்டமைப்பின் அளவுருக்களை ஆப்கானியர்கள் வரையறுப்பதன் முக்கியத்துவம், அத்துடன் நாட்டில் வன்முறை அதிகரிப்பதைத் தடுக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனும் நிகோலாய் பட்ருஷேவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தாலிருந்து இந்திய பிராந்தியத்தில் எழ வாய்ப்புள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இருநாடுகளிடையே கூட்டுறவு சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, ஆப்கான் நிலைமை, அரசியல் என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. SCO மற்றும் BRICS உட்பட பலதரப்பு வடிவங்களில் உள்ள தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றியும், வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறையில் ரஷ்ய-இந்திய ஒத்துழைப்பின் வளர்ச்சி பற்றியும் பேசப்பட்டது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"அஜித் தோவல் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பத்ருஷேவ் இடையே ஆப்கானிஸ்தான் தொடர்பான உயர் மட்ட அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகள் டெல்லியில் நடைபெற்றது. ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து இரு தரப்பினரும் விரிவாக விவாதித்தனர் ”என்று வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்வீட் செய்துள்ளார்.
"ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பத்ருஷேவை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஆப்கானிஸ்தான் தொடர்பாக மிகவும் பயனுள்ள விவாதங்கள், ”என்று ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
அடுத்த 10 நாட்களில் பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) ஆகிய இரண்டு முக்கிய மெய்நிகர் உச்சிமாநாடுகளில் இந்தியாவும் ரஷ்யாவும் பங்கேற்கின்றன.
செப்டம்பர் 9 ஆம் தேதி மோடி தலைமையில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. இதில் புடின் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 16-17 தேதிகளில் SCO உச்சிமாநாடு நடைபெறும். அப்போது மோடி ரஷ்ய தலைவரை மீண்டும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரண்டு உச்சி மாநாடுகளிலும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. தாலிபான்களுக்கு உதவுவதில் பாகிஸ்தானின் தீவிர பங்களிப்பு காரணமாக பெய்ஜிங்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த வாரம், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் "நாகரீகமாக" நடந்துகொள்வார்கள் என்று புடின் நம்பிக்கை தெரிவித்திருந்தார், "அப்போதுதான் காபூலுடன் உலக நாடுகள் உறவு பேண முடியும். ஆப்கானிஸ்தானின் சிதைவில் ரஷ்யா ஆர்வம் காட்டவில்லை. இது நடந்தால், பேசுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள் "என்று அவர் கூறினார்.
தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய பல நாட்களுக்கு பிறகு காபூலில் ரஷ்ய தூதர் தாலிபான்களை சந்தித்து தங்கள் நாட்டு தூதரகம் செயல்படும் என கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக்கூடாது என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதுபோன்ற ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முன்மொழிந்தன. 13 நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களித்தன. அதே நேரம், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நிரந்தர உறுப்பினர்கள் வாக்களிப்பை புறக்கணித்தன.
ஐநாவுக்கான ரஷ்யாவின் தூதுவர் வாசிலி நெபென்ஸியா, இந்தத் தீர்மானம் பயங்கரவாத அச்சுறுத்தல்களைப் பற்றி போதுமானதாக இல்லை. அமெரிக்காவால் ஆப்கானில் முடங்கிய பொருளாதார மற்றும் மனிதாபிமான விளைவுகளை பற்றி பேசவில்லை. ஆப்கானிஸ்தான் மீதான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது விலக வேண்டிய நிலை ரஷ்யாவுக்கு இதனால்தான் ஏற்பட்டது. ஏனெனில் தீர்மான வரைவை உருவாக்கியவர்கள், கொள்கை ரீதியான கவலைகளை புறக்கணித்துள்ளனர் என கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.