Shubhajit Roy
Afghanistan situation fragile : போதுமான சிறுபான்மையினருக்கான பிரதிநிதிகள் மற்றும் பெண் பிரதிநிதிகள் ஏதும் இல்லாத அமைச்சரவையை தாலிபான்கள் அறிவித்த மூன்று நாட்களுக்கு பிறகு இந்தியா வெள்ளிக்கிழமை சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆப்கானிஸ்தானில் "உள்ளடக்கிய பிரதிநிதித்துவத்திற்கு” அழைப்பு விடுத்தது.
இந்தியா அந்நாட்டின் அண்டை நாடாகவும், அதன் மக்களின் நண்பனாகவும் இருப்பதால் தற்போதைய நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது என்று புதுடெல்லி அடிக்கோடிட்டு காட்டியுள்ளது.
பாகிஸ்தானின் உள்நாட்டு உளவுத்துறை தலைவர், காபூலில் அமைச்சரவை நியமனங்களை தேர்வு செய்த சில நாட்கள் கழித்து தாலிபான் அமைச்சரவையை அறிவித்தது. அதன் பிறகு இந்தியா அறிவித்திருக்கும் முதல் அறிவிப்பு இதுவாகும்.
நியூயார்க்கில் உள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான டி.எஸ். திருமூர்த்தி, “ஆப்கானிஸ்தானில் இருக்கும் அனைத்து பிரிவு சமூகத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி முறைக்கு இந்தியா அழைப்பு விடுக்கிறது. அரசியல் ரீதியாக நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் மூலம் பரந்த, விரிவான, மற்றும் பிரதிநிதித்துவ உருவாக்கம் சர்வதேச அளவில் சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும்” என்று கூறினார்.
33 அமைச்சரவை உறுப்பினர்களில் 3 பேர் மற்றுமே பஷ்தூன் இனப்பிரிவை சேராத அமைச்சர்கள். அரசாங்கத்தின் இரண்டாவது துணைத் தலைவர் அப்துல் சலாம் ஹனாபி உஸ்பெக் இனத்தை சார்ந்தவர். இராணுவத் தளபதி காரி பாசிஹுதீன் மற்றும் பொருளாதார அமைச்சர் காரி டீன் ஹனீஃப் ஆகியோர் தாஜிக்கள்.
வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள படாக்ஷானில் தாலிபான்கள் முன்னேறுவதற்கு பாசிஹுதின் முக்கிய காரணமாக இருந்தார், மேலும் அவர் இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டதும் ஒரு வெகுமதி என்று கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் பலவீனமாக உள்ளது என்று திருமூர்த்தி கூறினார்.
ஆப்கானிஸ்தானின் அண்டை நாடாகவும், அதன் மக்களுக்கு நண்பர்களாகவும் இருக்கும் இந்தியாவுக்கு, ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழல் பெரும் கவலையை அளிக்கிறது. ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்காலம் பற்றியும், கடந்த இரண்டு தசாப்தங்களில் அடைந்த ஆதாயங்களை நிலைநிறுத்துவது பற்றியும் நிச்சயமற்ற நிலைகள் உள்ளன. இந்த சூழலில், ஆப்கானிஸ்தான் பெண்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும், ஆப்கான் குழந்தைகளின் அபிலாஷைகள் உணரப்பட வேண்டும் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் அவர் கூறினார்.
காபூல் மற்றும் பிற நகரங்களில் பெண்கள் வேலை செய்ய அல்லது சுதந்திரமாக படிக்க தடை விதித்த தாலிபான்களுக்கு எதிராக பெண்கள் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் இருந்து இந்த கருத்து வருகிறது.
எவ்வாறாயினும், இந்திய அறிக்கையில் தாலிபான்கள் பற்றி குறிப்பிடவில்லை. மேலும் அந்நாட்டின் தற்போதைய சூழலுக்கு தாலிபான்கள் தான் காரணம் என்ற பொறுப்பு கூறலையும் எங்கேயும் மேற்கூறவில்லை.
மனிதாபிமான உதவிகளை அவசரமாக வழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம். மேலும் இது தொடர்பாக ஐ.நா. மற்றும் பிற நிறுவனங்களுக்கு தடையின்றி அணுகல் வழங்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறோம் என்று கூறினார் திருமூர்த்தி.
நிலைமையை மேம்படுத்த தாலிபான்கள் மீது பொறுப்பு கூறாமல், ஆப்கானிஸ்தான் கடந்த சில ஆண்டுகளில் போதுமான ரத்தக்களரி மற்றும் வன்முறைகளை கண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான விருப்பத்துடன் மக்களுடன் இணைந்து நிற்க, எந்தவொரு பாகுபாடான நலன்களையும் தாண்டி, சர்வதேச சமூகத்தை ஒன்றாக வருமாறு நாங்கள் அழைக்கிறோம். பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினர் உட்பட அனைத்து ஆப்கானியர்களும் அமைதியுடனும் கௌரவத்துடனும் வாழ உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil