ஒடிசா மாநிலத்தில் இருக்கிறது மல்கன்கிரி மாவட்டம். 1972ம் ஆண்டு பலிமேலா அணை கட்டப்பட்டது. அது மல்கன்கிரி மக்களை மாநிலத்தின் பிறபகுதிகளிடம் இருந்து நீர் மூலமாக பிரித்து வைத்தது.
கிட்டத்தட்ட 46 வருடங்களாக அம்மாவட்ட மக்களின் போக்குவரத்து நீர் வழியாகவே அமைந்திருந்தது.
அவர்கள் காடுகளில் இருந்து பெறும் பொருட்களை மற்ற ஊர்களில் சென்று விற்க பெரும்பாலும் படகுகளையே பயன்படுத்தினார்கள்.
ராகி, புளி, மூங்கில்கள் ஆகியவற்றையும் மற்ற காட்டில் விளையும் பொருட்களையும் விற்க அவர்கள் படகுகளை பயன்படுத்தினார்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை, அரசாங்கப் படகுகள் இயக்கப்படும். ஆனால் 2014ம் ஆண்டு ஒரு படகு நீர்ப்பிடிப்பு பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்நிலையில் இம்மாவட்டத்தினை ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் இணைப்பதற்கான பாலம் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது.
To Read this article in English
அணை கட்டி 46 வருடங்கள் கழித்து ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்னாயக் “குருப்ரியா” என்ற 960 மீட்டர் நீளமுள்ள பாலத்தினை திறந்து வைத்துள்ளார்.
இந்த மல்கன்கிரி பகுதியில் மாவோய்ஸ்ட்டுகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், கிராம மக்கள் கஞ்சாவினை விவசாயம் செய்ய வைக்க தூண்டப்படுகிறார்கள்.
மேலும் மாவோய்ஸ்ட்டுகளின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறாது. இந்நிலையில் இங்கு போடப்பட்டிருக்கும் இந்த பாலம், அரசு மாவோய்ஸ்ட்டுகளுக்கு எதிரான தாக்குதல்களை விரைந்து நடத்த உதவும்.
கர்பிணிகள், மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு நீர் வழியாக செல்வதில் நிறைய பிரச்சனைகள் இருந்து வந்தன.
தற்போது ஆம்புலன்ஸ் போவதற்கும் இந்த பாலம் வழிவகை செய்யும் என்று மகிழ்ச்சி பதிவிட்டிருக்கிறார்கள் கிராம மக்கள்.
மிகுந்த பாதுகாப்பு பணிகளுக்கு மத்தியில் இந்த பாலம் கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது. மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தலால், பாலத்தின் இரு பக்கத்திலும் துணை ராணுவ வீரர்களின் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிட தக்கது.