தன் கடமை உணர்வு, நேர்மை, யார்க்கும் அஞ்சாத எண்ணத்துடன் செயல்பட்டு வந்ததால், 33 ஆண்டுகள் குடிமை பணியில் 70 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் கஸ்னி ஓய்வு பெற்றார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பிரதீப் கஸ்னி, கடந்த 1984-ஆம் ஆண்டு ஹரியானா மாநில குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்று மாநில பொறுப்பாற்றினார். அதன்பின், 1997-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தரம் உயர்த்தப்பட்டார்.
நேர்மைக்கு பெயர் பெற்றவர் பிரதீப் கஸ்னி. 2014-ஆம் ஆண்டு மாநில நிர்வாக சீர்திருத்த துறை செயலாளராக பணியாற்றியபோது,மாநில தகவல் ஆணையர்கள் மற்றும் சேவை பெறும் உரிமை ஆணையர்களின் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுப்பினார். இதையடுத்து, சில மாதங்களிலேயே அக்டோபர் மாதம் பாஜக அரசு ஹரியானாவில் ஆட்சி அமைத்தது. அதன்பிறகு, கஸ்னி, குர்கோவன் பகுதிக்கு மாற்றப்பட்டார்.
அதன்பிறகு, அப்பதவியிலிருந்து வெறும் ஒரு மாதம் 8 நாட்களிலேயே கஸ்னி நீக்கப்பட்டார். ஆனால், நீக்கப்பட்டதற்கான காரணத்தை அரசு குறிப்பிடவில்லை. நில ஒப்பந்தம் மற்றும் அரசு நிலங்கள் தனியார் நலனுக்காக தாரை வார்க்கப்படுதல் குறித்து கஸ்னி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்த சில நாட்களில் தான், அவர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக, 33 ஆண்டுகள் பதவியில் கிட்டத்தட்ட 70 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார், தன் கடமையை செய்ததற்காக. இவர் கடந்த புதன் கிழமை பணி ஓய்வு பெற்றார். கடைசியாக, மாநில நிலப் பயன்பாடு வாரியத்தின் சிறப்பு அதிகாரியாக பதவி வகித்தார். அந்த வாரியம் 2008-ஆம் ஆண்டு முதல் சரிவர செயல்படவில்லை என்பது ஆர்டிஐ தகவம் மூலம் தெரியவந்ததையடுத்து, சுமார் 6 மாதங்கள் ஊதியம் இல்லாமலேயே அப்பதவியில் வகித்தார். இப்படி, இல்லாத அலுவகம்/பதவியில் தன்னை அமர வைத்ததை எதிர்த்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பணி ஓய்வை முன்னிட்டு ஹரியானா மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் அவருக்கு வழக்கமான தேநீர் விருந்தை அளித்தது. அதில் பேசிய கஸ்னி, ”இச்சங்கம் உண்மையான பிரச்சனைகளை எதிர்கொள்ள தவறிவிட்டது. அதனால், இந்த தேநீர் விருந்து எந்த அர்த்தத்தையும் தராமல், வழக்கமான ஒன்றாகவே கருதப்படுகிறது”, என கூறினார்.