இலவசங்கள் வழங்குவதாக தேர்தலில் வாக்குறுதி அளிப்பது தொடர்பான விவாதத்திற்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் "ரெவ்டி கலாச்சாரம்" பற்றிய விவாதம் உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நுழைந்துவிட்ட நிலையில், இப்போது தலைமை கணக்குத் தணிக்கையாளரும் (CAG- சி.ஏ.ஜி) இதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்கிறார்.
மாநில அரசாங்கங்களின் பொருளாதாரத்திற்கு சவால்களை ஏற்படுத்தக்கூடிய மானியங்கள், வரவு-செலவுக் கடன்கள், தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றின் சுமையை "தடை" செய்யும் அளவுருக்களை எவ்வாறு உருவாக்குவது என்பதை CAG ஆராய்கிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துக்கொண்டது.
இதையும் படியுங்கள்: ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த இஸ்ரோ ராக்கெட்.. இந்தியா சாதனை!
இந்த வார தொடக்கத்தில் சி.ஏ.ஜி.,யின் தணிக்கை ஆலோசனை வாரியத்தின் (ஏ.ஏ.பி) கூட்டத்தின்போது மாநில அரசாங்கங்களின் "நிதி நிலைத்தன்மை" பற்றிய பிரச்சினை வந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
சி.ஏ.ஜி கிரிஷ் சந்திர முர்மு தலைமையிலான குழு, "கவரேஜ், நோக்கம் மற்றும் தணிக்கையின் முன்னுரிமை உட்பட" தணிக்கை தொடர்பான விஷயங்களில் அமைப்புக்கு "பரிந்துரைகளை" வழங்குகிறது.
கிரிஷ் சந்திர முர்மு தலைமையிலான 21 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் 10 வெளி உறுப்பினர்கள் உள்ளனர்: அசோக் குலாட்டி, விவசாயப் பொருளாதார நிபுணர்; டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி, தலைவர் மற்றும் செயல் இயக்குனர், நாராயண ஹெல்த்; எச்.கே தாஷ், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி; மகரந்த் ஆர். பரஞ்சபே, கல்வியாளர்; மணிஷ் சபர்வால், தலைவர், டீம் லீஸ் சர்வீசஸ்; மரூப் ராசா, ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி; நிதின் தேசாய், ஆய்வாளர், TERI; ரவீந்திர எச். தோலாகியா, பொருளாதார நிபுணர்; சுரேஷ் என் படேல், மத்திய விஜிலென்ஸ் கமிஷனர்; மற்றும் எஸ்.எம் விஜயானந்த், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.
கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்கள் "வருவாய் பற்றாக்குறை" ஆகிவிட்டன, அத்தகைய மாநிலங்கள் தங்கள் வருவாய் ஆதாரங்களில் இருந்து தங்கள் செலவினங்களை எவ்வாறு நிர்வகிக்க திணறுகின்றன என்பது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆறு ஆண்டுகளில் மாநிலங்களின் திருப்பிச் செலுத்தும் பொறுப்புகளையும் உயர் தணிக்கை அமைப்பான சி.ஏ.ஜி கவனித்து வருகிறது. "பெரும்பாலான மாநிலங்களுக்கு ஒரு உண்மையான பிரச்சினை இருப்பதை நாங்கள் பார்த்தோம், அது திருப்பிச் செலுத்துதல். அவர்கள் முன்பு என்ன கடன் வாங்கியிருந்தாலும், திருப்பிச் செலுத்தும் சுமை அதிகமாக இருப்பதால், பல மாநிலங்களில், அவர்களின் பட்ஜெட்டில் பாதி, திருப்பிச் செலுத்துவதில் மட்டுமே செல்லும். இது நிலையானது அல்ல, ”என்று ஒரு வட்டாரம் கூறியது.
மாநிலங்களின் வரவு செலவுத் திட்டங்களில் மானியங்கள் மற்றும் பிற செலவினங்கள் தொடர்பான சிக்கல்களை சி.ஏ.ஜி முன்னிலைப்படுத்தி வருகிறது, ஆனால் முன்மொழியப்பட்ட வழிமுறையில் அது பட்ஜெட்டுக்கு வெளியே கடன் வாங்குதல்கள், தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும்.
சி.ஏ.ஜி அமைப்பானது "கடன், கடன்கள், மானியங்கள் போன்றவற்றை, அவை இலவசங்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், உத்தரவாதங்கள் மற்றும் அவற்றின் நிலைத்தன்மை" ஆகியவற்றின் ஒப்பீட்டு நிலையை தொகுத்துள்ளதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
“நடப்பு ஆண்டு முதல் நாங்கள் மிகவும் கண்டிப்பாக இருக்கப் போகிறோம்… இது நிலையானது அல்ல என்று நாங்கள் கூறுகிறோம். நீங்கள் என்ன செய்தாலும், உங்கள் நிதி நிர்வாகம் மோசமாகிவிடும். உங்களால் இதைத் தாங்க முடியாது, அரசுக்குப் பிரச்சினை ஏற்படும்” என்று ஒரு வட்டாரம் கூறியது.
தணிக்கை அதிகாரிகள், தற்போது, மானியங்களைப் பார்க்கிறார்கள், ஆனால் நிவாரணம் மற்றும் தளர்வுகள் மானியங்களில் பிடிக்கப்படவில்லை.
உதாரணமாக, கடன்களுக்கான வட்டி மானியம், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட பணம், கடன் தள்ளுபடி போன்றவை ”எப்போதாவது ஆனால் முறையாக இல்லாமல்" CAG ஆல் கணக்கிடப்பட்ட சில கூறுகளில் அடங்கும், என வட்டாரம் கூறியது.
மேலும், இலவசங்கள் எவ்வளவு வழங்கப்படுகின்றன என்பதை ஆராயவும் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது. "டிவி, மடிக்கணினிகள், சைக்கிள்கள், கிரைண்டர், மிக்சி போன்ற பொருட்களை மாநிலங்கள் விநியோகிக்கின்றன... மானியத்தில் பிரதிபலிக்காத விஷயங்கள் உள்ளன... எனவே அவற்றை எவ்வாறு கைப்பற்றுவது என்பதற்கான அளவுருக்களை நாம் உருவாக்க வேண்டும்," என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும், மாநிலங்களின் நிதி ஆதாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சி.ஏ.ஜி.,யிடம் என்ன விருப்பங்கள் உள்ளன என்று கேட்டதற்கு, “நாங்கள் சிவப்புக் கொடியைக் காட்ட (தடை செய்ய) திட்டமிட்டுள்ளோம். நாங்கள் அவ்வப்போது எங்கள் அவதானிப்புகளை வலுப்படுத்தி வருகிறோம், இந்த தணிக்கை ஆலோசனைக் குழுவின் சமர்ப்பிப்புகளுக்குப் பிறகு, நாங்கள் இன்னும் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் ஆராய்வோம், என்று வட்டாரம் கூறியது.
2022-23 நிதியாண்டிற்கான கணக்குகளில் கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது. "எனவே இந்த கட்டத்தில் நாம் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்." என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.