வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத கட்சித் தலைவர்கள் பட்டியலில் இணைந்த பா.ஜ.க எம்.பி ஜெயந்த் சின்ஹா, “நேரடி தேர்தல் பணிகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு” கட்சித் தலைவர் ஜே.பி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சனிக்கிழமை தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: After Gautam Gambhir, Jayant Sinha asks BJP to relieve him from ‘direct electoral duties’
X தளத்தில் ஒரு பதிவில், ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் தொகுதி எம்.பி.,யான ஜெயந்த் சின்ஹா, "உலகளாவிய காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் தனது முயற்சிகளை பாரதத்திலும் உலகம் முழுவதிலும் கவனம் செலுத்த விரும்புவதாக" கூறினார். பொருளாதாரம் மற்றும் நிர்வாக விவகாரங்களில் கட்சியுடன் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் ஜெயந்த் சின்ஹா கூறினார்.
மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க தலைமைக்கு முன்னாள் மத்திய அமைச்சரான ஜெயந்த் சின்ஹா தனது நன்றியைத் தெரிவித்தார்.
“கடந்த பத்து ஆண்டுகளாக பாரத் மற்றும் ஹசாரிபாக் மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க தலைமை வழங்கிய பல வாய்ப்புகளால் நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஜெய் ஹிந்த்!” என்று X தளத்தில் ஜெயந்த் சின்ஹா பதிவிட்டுள்ளார்.
பல புதிய தலைவர்களுக்கு சீட் வழங்குவது குறித்து பா.ஜ.க ஆலோசித்து வருவதாகவும், மேலும் சில சிட்டிங் எம்.பி.,க்களும் பிற அமைப்புப் பணிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக கட்சியிடம் கூறியதாக கூறப்படுகிறது.
முன்னதாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிழக்கு டெல்லி பா.ஜ.க எம்.பி.,யுமான கெளதம் கம்பீர், விளையாட்டில் கவனம் செலுத்துவதற்காக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார், இதன் விளைவாக கட்சியில் இருந்து மக்களவை சீட்டுக்கான போட்டியில் இருந்து விலகினார்.
அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றத் தொகுதியிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ, பா.ஜ.க.,வின் மாநில பிரிவு உயர் தலைமைக்கு பரிந்துரைத்த சாத்தியமான வேட்பாளர்கள் குழுவில் கம்பீர் இடம் பெறவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், கம்பீர், X தளத்தில் தனது வெளியேற்றத்தை அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“