உ.பி.யில் அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா பதவி விலகிய 24 மணி நேரத்தில் மற்றொரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
403 தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
உபி.,யை ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்திட கூடாது என்பதற்காக,அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேர்தல் களத்தில் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடுத்தடுத்து வெளியேறுவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்திருந்த சுவாமி பிரசாத் மயூரா திடீரென பதவியை ராஜினாமா செய்து, பாஜகவில் இருந்தும் விலகி அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து பாஜகவைச் சோ்ந்த பிரஜேஷ் பிரஜாபதி, ரோஷன் லால் வர்மா, பகவதி சாகர் ஆகிய 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் இன்று, பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள அமைச்சர் தாரா சிங் செளகான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த அறிவிப்பானது, மயூரா வெளியேறி 24 மணி நேரம் ஆவதற்குள் வந்துள்ளது, உபி தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுகான் தனது ராஜினாமா கடிதத்தில், "முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜியின் அமைச்சரவையில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு தோட்டக்கலை அமைச்சராக இருந்த நான், எனது துறையின் முன்னேற்றத்திற்காக முழு மனதுடன் உழைத்தேன். ஆனால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, தலித்துகள், விவசாயிகள், வேலையற்ற இளைஞர்கள் மீதான அரசின் அணுகுமுறை மிகவும் அலட்சியமாக இருந்தது.அதே போல் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகள் இடஒதுக்கீட்டில் ஏற்பட்ட குழப்பத்தால் பாதிக்கப்பட்டேன்.உ.பி., அமைச்சரவையில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
அடுத்தடுத்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகி வருவது பாஜகவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil