திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை அசாமிற்குள் அனுமதிக்காத அசாம் அரசின் மீது கடுமையான விமர்சனங்களை பதிவு செய்திருக்கும் மம்தா பானர்ஜி.
அசாம் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள்
அசாம் குடிமக்கள் வரைவு பதிவேட்டில் இருந்து சுமார் 40 லட்சம் பேரை நீக்கியிருக்கிறது அரசு. இதனால் பாதிப்பிற்கு உள்ளாகியவர்களைக் காண மேற்கு வங்கத்தில் இருந்து திரிணாமுல் கட்சியினை சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர்.
ஆனால் அசாம் அரசு அவர்கள் அனைவரையும் விமானநிலையத்தில் பிடித்து வைத்திருந்தது. இதனை அறிந்த மம்தா பானர்ஜி, அசாம் அரசு மத்திய அரசுடன் கைகோர்த்துக் கொண்டு இப்படியான செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்று கருத்து தெரிவித்திருந்தார்.
குடிமக்கள் வரைவு பதிவேடு விவகாரம் குறித்து மம்தாவின் கருத்தினை படிக்க
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டு பேரையும் சில்சார் விமான நிலையத்தில் இருந்து வெளியிலேயே விடாமல் சிறை பிடித்துவிட்டது காவல்துறை.
நீண்ட நேரம் கேட்டுக் கொண்ட பின்பும் அவர்களை வெளியில் அனுப்பாததால் ஆறு நபர்கள் நேற்று நள்ளிரவு மேற்கு வங்கம் திரும்பினார்கள். மீதம் உள்ள இரண்டு நபர்கள் இன்று மேற்கு வங்கம் திரும்புகிறார்கள்.
அந்த எட்டு பேர் அடங்கிய குழுவில் நான்கு பெண் உறுப்பினர்களும் அடங்குவார்கள். அசாம் மாநிலக் காவல்துறை மிகவும் மோசமாக நடந்து கொண்டது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதான நடவடிக்கைக் குறித்து அசாம் மாநில டிஜிபி கூறுகையில், இவர்களின் வரவு அசாமில் பிரச்சனையை உண்டாக்கும் என்பதால் தான் பிடித்து வைக்க வேண்டியதாயிற்று என்று குறிப்பிட்டுள்ளார்.