Advertisment

நரேந்திர மோடி வழிகாட்டல்; வயநாடு உள்பட 60 தொகுதிகள் மீது பார்வையை திருப்பிய பா.ஜ.க

இதில் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியும் உள்ளது.

author-image
WebDesk
New Update
After PMs directive BJP plans mega minority outreach 60 Lok Sabha seats in focus

பாஜக சிறுபான்மை மோர்ச்சா தேசியத் தலைவர் ஜமால் சித்திக்

பிரதமர் நரேந்திர மோடியின் செய்திகளை சிறுபான்மை மக்களிடத்தில் கொண்டு செல்ல 60 தொகுதிகளில் 4 மாத பணி திட்டத்தை பாஜக சிறுபான்மை மோர்சா திட்டமிட்டுள்ளது.

இதற்காக 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 60 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியும் அடங்கியுள்ளது.

Advertisment

இந்தத் தொகுதிகளில் இருந்து 5 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் அச்சமூகத்தை சென்றடைய தூதுவர்களாக பயன்படுத்தப்படுவார்கள்.

இந்தத் திட்டங்களின் முன்முயற்சியாக கட்சி மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஸ்கூட்டர் யாத்ரா மற்றும் சிநேக யாத்திரையை ஏற்பாடு செய்யும்.

மேலும் மே மாதம் டெல்லியில் பிரதமர் மோடி உரையாற்றும் பொது பேரணியுடன் இந்த பரப்புரை முடிவடையும். 60 இடங்களைச் சேர்ந்த அனைத்து தூதர்களும் நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.

இது குறித்து பாஜக சிறுபான்மை மோர்ச்சா தேசியத் தலைவர் ஜமால் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடிஜி வழங்கிய செய்தியை நிறைவேற்ற இந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். மேலும் மக்களை நாம் சென்றடைய வேண்டும்.

ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சி அடையாத வரை இந்தியா வளர்ச்சி அடையாது என்றும் பிரதமர் கூறியுள்ளார். நாங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என நினைக்கிறோம். எனவே நாங்கள் எங்கள் எல்லையை வலுப்படுத்த வேண்டும்” என்றார்.

மேலும் அவர், “ஓட்டுக்காக இதைச் செய்யக்கூடாது என்று மோடி ஜி சொன்னாலும், நாங்கள் ஒரு அரசியல் கட்சி, நாங்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். எனவே எங்கள் பணி இரண்டு காரணிகளையும் மனதில் வைத்து இருக்கும்.

அரசாங்கத்தின் திட்டங்கள் ஒவ்வொரு பிரிவினரையும் சென்றடைவதை உறுதி செய்வதிலும், ஒவ்வொரு சமூகத்திற்கும் பாஜகவின் வரம்பை விரிவுபடுத்துவதிலும் எங்கள் பணி இருக்கும்” என்றார்.

அந்த வகையில் தற்போது அடையாளம் காணப்பட்ட மக்களவைத் தொகுதிகளில், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தலா 13 உள்ளன.

தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் இருந்து 5, பீகாரில் இருந்து 4, கேரளா மற்றும் அஸ்ஸாமில் இருந்து தலா 6, மத்தியப் பிரதேசத்தில் இருந்து 3, தெலங்கானா மற்றும் ஹரியானாவில் இருந்து தலா இரண்டு உள்ளன.

மேலும், மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவுகளில் இருந்து தலா ஒரு தொகுதிகள் உள்ளன.

பாஜக பட்டியலில் உள்ள மேற்கு வங்க தொகுதிகளில் பெஹ்ராம்பூர் (64 சதவீதம் சிறுபான்மை மக்கள், ஜாங்கிபூர் (60 சதவீதம்), முர்ஷிதாபாத் (59 சதவீதம்), மற்றும் ஜெய்நகர் (30 சதவீதம்) ஆகியவை உள்ளன.

அடுத்து பீகாரில் இருந்து கிஷன்கஞ்ச் (67 சதவீதம்), கதிஹார். (38 சதவீதம்), அராரியா (32 சதவீதம்), பூர்ணியா (30 சதவீதம்) ஆகியவை உள்ளன.

கேரளாவில் பாஜக கவனம் செலுத்தும் நாடாளுமன்றத் தொகுதிகளில் வயநாடு (57 சதவீதம் சிறுபான்மையினர்), மலப்புரம் (69 சதவீதம்), பொன்னானி (64 சதவீதம்), கோழிக்கோடு (37 சதவீதம்), வடகரா (35 சதவீதம்), மற்றும் காசர்கோடு (33 சதவீதம்) ஆகியவை உள்ளன.

அதேபோல், உத்தரபிரதேசத்தில் பிஜ்னோர் (38.33 சதவீதம்), அம்ரோஹா (37.5 சதவீதம்) ஆகியவை அடங்கும். கைரானா (38.53 சதவீதம்), நாகினா (42 சதவீதம்), சம்பல் (46 சதவீதம்), முசாபர்நகர் (37 சதவீதம்), மற்றும் ராம்பூர் (49.14 சதவீதம்) ஆகிய தொகுதிகள் உள்ளன.

ஹரியானாவிலிருந்து குருகிராம் (38 சதவீதம் சிறுபான்மையினர்) மற்றும் ஃபரிதாபாத் (30 சதவீதம்) உள்ளன. தெலங்கானாவில் ஹைதராபாத் (41.17 சதவீதம்) மற்றும் செகந்திராபாத் (41.17 சதவீதம்) ஆகியவை அடங்கும்.

இது குறித்து சித்திக், “இந்தப் பரப்புரையின் ஒரு பகுதியாக, பிஜேபி தொண்டர்கள் தொழிலதிபர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் தொடர்பு கொள்வார்கள்.

அவர்கள், “பிரதமர் நரேந்திர மோடிஜின் தகவல்கள் மற்றும் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை எடுத்துரைப்பார்கள். மத்திய அரசு மீது நேர்மறையான அணுகுமுறையைக் கொண்ட முஸ்லிம்களும் பிற சிறுபான்மை சமூக மக்களும் உள்ளனர்.

நாங்கள் அவர்களை அணுகுவோம், அவர்களை ஒன்று சேர்ப்போம் மற்றும் அவர்களின் குழுக்களின் மற்ற உறுப்பினர்களை அணுகுவோம்.

நாங்கள் ஒரு சிநேக யாத்திரையை ஏற்பாடு செய்வோம். அரசாங்கத்தின் மக்கள் சார்ந்த திட்டங்களைப் பற்றி பேசவும், இந்தத் திட்டங்கள் அனைவரையும் சென்றடைவதைக் காண நாங்கள் பல்வேறு முகாம்களை நடத்துவோம்” என்றார்.

மேலும், “நரேந்திர மோடி தனது உரையில் சூஃபி துறவிகளை பற்றி பேசினார். சிறுபான்மை பிரிவும் சூஃபி இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களுடன் இணைவதற்கான திட்டங்களைத் தயாரித்து வருகிறது” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பாஜக தேசிய செயற்குழுவில், வாக்குகளை எதிர்பார்க்காமல் பாஸ்மாண்டாக்கள், போராக்கள், முஸ்லீம் தொழில் வல்லுநர்கள் மற்றும் படித்த முஸ்லிம்களை அணுகி நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு கட்சித் தொண்டர்களை கேட்டுக் கொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Bjp Narendra Modi Wayanad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment