காங்கிரஸ் கட்சியின் ஆறு எம்.எல்.ஏ.க்கள் மாற்றி வாக்களித்ததால், ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்வியை தோற்கடித்ததன் மூலம், பா.ஜ.க., இமாச்சலப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "மக்களின் ஆணையையும் நம்பிக்கையையும் காங்கிரஸ் அரசாங்கம் இழந்து விட்டது" என்று கூறி, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அரசாங்கத்தை பதவி விலகுமாறு பா.ஜ.க அழைப்பு விடுத்த நிலையில், இந்த கோரிக்கையை முதல்வர் சுக்விந்தர் சுகு நிராகரித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: After pulling off Himachal upset in Rajya Sabha election, BJP guns for Sukhu govt: ‘Will meet Governor in the morning’
சட்டசபையின் வருடாந்திர பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், சட்டசபையில் மாநில நிதி மசோதா மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாகவே அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
68 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பா.ஜ.க.,வின் ஹர்ஷ் மகாஜனும், காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்வியும் தலா 34 வாக்குகளைப் பெற்றதால், முன்னாள் காங்கிரஸ் தலைவரான பா.ஜ.க.,வின் ஹர்ஷ் மகாஜன், தேர்தலில் வெற்றி பெற்றார். இரண்டு சீட்டுகளில் இருந்து, எடுக்கப்பட்ட ஒரு சீட்டு அபிஷேக் மனு சிங்வியின் பெயரைக் கொண்டிருந்தது, எனவே விதிமுறைகளின்படி அவர் "விலக்கப்பட்டார்" மற்றும் ஹர்ஷ் மகாஜன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க.,வின் 25 எம்.எல்.ஏ.,க்களுடன் ஒப்பிடும்போது காங்கிரஸுக்கு 40 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர், மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பா.ஜ.க நம்பியிருந்தது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ராஜிந்தர் ராணா, சுதிர் சர்மா, சைதன்ய சர்மா, இந்தர் தத் லகன்பால், தாவீந்தர் குமார் பூட்டோ, ரவி தாக்கூர் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆஷிஷ் சர்மா, கே.எல் தாக்கூர், ஹோஷ்யர் சிங் ஆகியோர் ஹர்ஷ் மகாஜனுக்கு வாக்களித்தனர். முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, எம்.எல்.ஏ.,க்கள் ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பஞ்ச்குலாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வெளியே எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து கார்களில் செல்வதாக வெளியான வீடியோ கிளிப் இணையத்தில் வைரலானது. "ஐந்து முதல் ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்" மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்) மற்றும் ஹரியானா காவல்துறையின் கான்வாய் மூலம் "கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்" என்று முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குற்றம் சாட்டினார்.
சுக்விந்தர் சுகு அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி, மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் பிண்டல் செய்தியாளர்களிடம், “அவர்களுக்கு ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை. பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரை காலையில் சந்திப்போம். அரசு பதவி விலக வேண்டும்” என்று கூறினார். முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெய் ராம் தாக்கூரும், சுக்விந்தர் சுகு அரசாங்கம் "ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கூறினார்.
ஆனால் ஒரு செய்தியாளர் சந்திப்பில், முதல்வர் சுக்விந்தர் சுகு பா.ஜ.க தலைவர்களின் கோரிக்கையை நிராகரித்தார். “நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. எங்களுக்கு 34 வாக்குகள் கிடைத்தன, அவர்களுக்கு 34 வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் மாற்றி வாக்களித்தனர். அவர்கள் முன்னணி வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக வாக்களித்தனர். இது மனக்கசப்பு வாக்குதானா?” என்று சுக்விந்தர் சுகு கூறினார்.
கட்சியின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று சுக்விந்தர் சுகுவிடம் கேட்டதற்கு, “நடவடிக்கை இல்லை. 34 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் நேர்மையை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால், அவர்கள் பண்பு, ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றைக் காட்டினார்கள். அந்த எம்.எல்.ஏ.,க்கள் எங்களுடன் இருக்கிறார்கள். ஹிமாச்சலத்தின் கலாச்சாரம் இதை (மாற்றி வாக்களிப்பது) அனுமதிக்கவில்லை. இமாச்சல பிரதேச மக்கள் இதை விரும்புவதில்லை” என்று கூறினார்.
சுக்விந்தர் சுகுவுடன், செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அபிஷேக் மனு சிங்வி, “ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றதற்கு அவரை நான் வாழ்த்த விரும்புகிறேன். ஆனால் அவரது கட்சியை சுயபரிசோதனை செய்யுமாறு நான் நிச்சயமாக கேட்டுக் கொள்கிறேன். 25 இடங்களைக் கொண்ட ஒரு கட்சி 43 இடங்களைக் கொண்ட ஒருவருக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்தினால், அதற்கு ஒரே ஒரு செய்தி மட்டுமே உள்ளது. நான் இங்கே கொள்கைகளைப் பற்றி பேசுகிறேன். ‘சட்டம் அனுமதிக்காததை வெட்கமின்றி செய்வோம்’ என்பதுதான் அந்தச் செய்தி. ஒன்பது பேர் திடீரென்று ஒரு புதிய சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு, அதுவும் ஒரே இரவில் மாறிவிட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால், நாம் அனைவரும் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்று நினைக்கிறேன்,” என்று கூறினார்.
மேலும், “புதிய இந்தியாவின் வரையறை இது என்றால், நான் பழைய இந்தியாவையே விரும்புகிறேன். இன்று தோற்றாலும் சரித்திரம் படைத்துள்ளோம். எங்கள் நண்பர்களின் அனைத்து முயற்சிகளையும் மீறி 34-34 என சமன் ஆனது நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்,” என்றும் அபிஷேக் மனு சிங்வி கூறினார்.
முன்னதாக மாலை, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், ஜெய்ராம் தாக்கூர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டி, வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் (EC) மனு அளித்தார். திங்களன்று உடல்நிலை சரியில்லாமல் இருந்த பப்லூவை பஞ்சாபின் ஹோஷியார்பூரில் இருந்து அழைத்து வர முதல்வர் தனது ஹெலிகாப்டரை அனுப்பியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். சிம்லாவில் பப்லூவை முதல்வர் சுக்விந்தர் சுகு வரவேற்று வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தார், எம்.எல்.ஏ மீது சுக்விந்தர் சுகு செல்வாக்கு செலுத்தியதாக குற்றம் சாட்டினார். தேர்தல் விதிமுறைகளை மீறி பதிவான எம்.எல்.ஏ.,வின் வாக்குகளை எண்ணக்கூடாது என்றும் கூறினார்.
கூடுதல் தகவல்கள்: PTI
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.