Under L-G fire, AAP steps up attack on Centre: டெல்லி கலால் கொள்கை 2021-22 குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுனர் பரிந்துரைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கலால் துறைக்கு தலைமை தாங்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சி ஒன்றுபட்டது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் முதல் ராஜ்யசபா எம்.பி சஞ்சய் சிங் மற்றும் மூத்த தலைவர்கள் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் வரை, கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மத்திய அரசை தாக்கி, நாட்டில் ஆம் ஆத்மியின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியை கண்டு மத்திய அரசு "பயந்து" இருப்பதாக கூறினர்.
மணீஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டுகள் போலியானது, புனையப்பட்டது மற்றும் ஆதாரமற்றது என்று கூறிய கெஜ்ரிவால், தான் சந்தித்ததிலேயே துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மிகவும் உறுதியான நேர்மையான நபர் என்று கூறினார். மேலும், மணீஷ் சிசோடியாவை கைது செய்ய அவர்கள் விரும்புகிறார்கள் என்று நான் கடந்த மூன்று நான்கு மாதங்களாக கூறிவருகிறேன்... இந்த வழக்கில் ஒரு துளியும் உண்மை இல்லை, என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
இதையும் படியுங்கள்: குடியரசுத் தலைவர் தேர்தல்: திரெளபதி முர்மு வெற்றிக்கு உதவிய எதிர்கட்சி வாக்குகள்
தனது அரசியல் எதிரிகளை "சாவர்க்கரின் பிள்ளைகள்" என்று அழைத்த கெஜ்ரிவால், "நாங்கள் ஆங்கிலேயர்களுக்கு முன் தலை குனிய மறுத்து, தூக்கிலிடப்பட்ட பகத்சிங்கின் குழந்தைகள்... நாங்கள் சிறைக்கு பயப்படவில்லை" என்று கூறினார்.
மேலும், “பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும். சுகாதாரத்துறையில் பணியாற்றிய சத்யேந்தர் ஜெயினை கைது செய்து சிறையில் அடைத்தீர்கள், இப்போது டெல்லியில் லட்சக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் வேலைவாய்ப்பை முன்னேற்றி வரும் மணீஷ் சிசோடியாவை சிறையில் அடைக்க விரும்புகிறீர்கள். அவரை கைது செய்யுங்கள், இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் சிறையில் அடையுங்கள், ஆனால் அவர் திரும்பி வருவார். உங்கள் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் தோல்வியடையும், மேலும் நீங்கள் தவறாக நிரூபிக்கப்படுவீர்கள், நீதிமன்றத்தில் கண்டிக்கப்படுவீர்கள்,” என்றும் அரவிந்த கெஜ்ரிவால் கூறினார்.
கல்காஜியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அதிஷி கூறுகையில், “வருவாய் அதிகரித்துள்ள நிலையில், இந்தக் கொள்கையால் கருவூலத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது... புதிய கொள்கையை அமல்படுத்திய நான்கு மாதங்களுக்குள்... பொது கருவூலத்துக்கு ரூ.1,300 கோடி லாபம் கிடைத்தது. குற்றச்சாட்டுகளை எழுப்புவதற்கு முன் பா.ஜ.க சில கணிதங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும், என்று கூறினார்.
பா.ஜ.க தலைவர் மீனாட்சி லேகி என்பவரால் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அதிஷி, “டெண்டரைப் பெறாத ஏஜென்சி சமர்ப்பித்த தொகையை மணீஷ் சிசோடியா திருப்பித் தந்ததாக அவர் கூறியுள்ளார். உங்கள் சொந்தப் பிரதிநிதியான துணைநிலை ஆளுனர் கையொப்பமிட்ட கொள்கையைப் பற்றி அவருக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன், டெண்டர்களைச் சமர்ப்பிக்கும் அனைத்து ஏஜென்சிகளும் செக்யூரிட்டி டெபாசிட் கொடுக்க வேண்டும், டெண்டரைப் பெறாதவர்கள் அந்தத் தொகையைத் திரும்பப் பெறுவார்கள். இது பாதுகாப்பு வைப்புச் செயல்பாட்டின் அடிப்படைக் கொள்கையாகும். பா.ஜ.க இதை ஒரு பெரிய ஊழலாகப் பொய்யாகக் காட்டுகிறது,” என்று கூறினார்.
உரிமம் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள் மற்றும் செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் பா.ஜ.க தலைவர் மீனாட்சி லேகி குற்றம் சாட்டியிருந்தார்.
ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்து நாட்டை விட்டு தப்பியோடிய நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற தலைமறைவான குற்றவாளிகளை எப்படி இந்தியாவுக்கு கொண்டு வருவது என தெரியாமல் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ திணறி வருவதாக ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி சஞ்சய் சிங் கூறினார். மேலும், அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரை மோடி அரசு துன்புறுத்தி அவமானப்படுத்துகிறது…” என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூர் விவகாரம்
முந்தைய நாள், ஒரு உச்சிமாநாட்டிற்காக சிங்கப்பூர் செல்ல இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் பயணத்தை "தடுத்ததற்காக" பிரதமர் நரேந்திர மோடியை சௌரப் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தாக்கினார் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான "பாதுகாப்பின்மை" நாட்டின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கிறது என்று கூறினார்.
“(அமெரிக்க) அதிபர் (டொனால்டு) டிரம்பின் பதவிக் காலத்தில், வாஷிங்டன் அல்லது டெக்சாஸ் கவர்னரை, அந்த மாநிலங்களில் செய்ப்பட்ட நல்ல பணிகளுக்காக, அது எப்படி செய்யப்பட்டது என்பதைப் பற்றி பேச, இந்திய அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ட்ரம்ப் அவர்களை தடுத்து நிறுத்தி போகக் கூடாது என்று கூறி, அவர்களின் இடத்தில் வேறு யாரையாவது போகச்சொன்னால், ஒரு ஜனாதிபதி, தேசத்தின் தலைவர், ஒரு மாநிலத்தின் அரசியல் தலைவர்களை அவர்கள் போக மாட்டார்கள், மற்றொருவர் செல்வார் என்று கூறி நிறுத்துகிறார் என்று இந்தியாவிலும் உலகெங்கிலும் அவரை விமர்சித்திருப்பார்கள், ”என்று சௌரப் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“இதன் காரணமாக இந்தியாவின் இமேஜ் பாதிக்கப்படுகிறது. அழைப்பு விடுத்தும் ஒரு முதலமைச்சரை வெளிநாட்டுப் பயணத்திற்குச் செல்ல பிரதமர் விடுவதில்லை என்று உலகமே நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது,” என்று கூறிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் ஓய்வுப் பயணமோ, விடுமுறையோ, சுற்றுலா பயணமோ செல்லவில்லை என்று கூறினார். முன்னதாக சிங்கப்பூரில் நடைபெறும் உலக நகரங்களின் உச்சி மாநாட்டிற்குச் செல்ல வேண்டாம் என்று கெஜ்ரிவாலுக்கு துணைநிலை ஆளுனர் கடிதம் எழுதியிருந்தார், இது மேயர்களின் மாநாடு என்றும், உள்ளடக்கப்பட்ட அனைத்து விஷயங்களும் அரசாங்கத்தின் வரம்பிற்குள் வராது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.