சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலீஜியம் பரிந்துரைகளை விரைவில் நிறைவேற்றுவோம் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்வதற்கான பரிந்துரைகளை மத்திய அரசு தாமதப்படுத்தியதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. அப்போது, இது "மிகவும் தீவிரமான பிரச்சினை" என்று கூறியுள்ளது.
34 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தில், தற்போது 27 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் 5 நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்கு கொலீஜியம் பரிந்துரைத்தது.
அவர்கள் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் மற்றும் மணிப்பூர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் ஆவார்கள்.
இந்த நீதிபதிகளை நியமனம் செய்வதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை கேள்விக்குட்படுத்தும் மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரித்தது.
அப்போது, சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தின் 5 பரிந்துரைகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/