நுபுர் சர்மா விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை விமர்சித்த டெல்லி முன்னாள் நீதிபதி உள்பட மூவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் அனுமதி மறுத்துவிட்டார்.
தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது.
அவருக்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்றன. அவர் மீது நாடு முழுக்க பல்வேறு இடங்களில் வழக்குகள் பதியப்பட்டன. இது தொடர்பான வழக்கை ஜூலை 1ஆம் தேதியன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், ஜே பி பர்டிவாலா அமர்வு, பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா ஒரு உளறுவாய், பொறுப்பற்ற தன்மையில் பேசியுள்ளார். நாடு முழுக்க நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறைக்கு தனிப்பட்ட முறையில் அவரே பொறுப்பு எனத் தெரிவித்திருந்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வின் இந்தக் கருத்தை டெல்லி முன்னாள் நீதிபதி எஸ்என் திங்ரா, வழக்குரைஞர்கள் அமன் லேகி மற்றும் கே ராம குமார் ஆகியோர் விமர்சித்துள்ளனர். இவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி வழக்குரைஞர் ஜெய சுகின் என்பவர் இந்திய அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்திற்கு பதில் அளித்துள்ள வேணுகோபால், ‘உச்ச நீதிமன்றம் பல்வேறு முக்கிய தீர்ப்புகள் மற்றும் வெளிப்படையான நியாயமான விமர்சனங்களை வழங்கியுள்ளது. உங்கள் கடிதத்தில் பெயரிடப்பட்டள்ள மூன்று நபர்களின் விமர்சனம் தீங்கிழைத்தல், நீதி நிர்வாகத்தை சீர்குலைக்கும் முயற்சி அல்லது நீதித்துறையின் நற்பெயரை வேண்டுமென்றே குறைக்கும் முயற்சி என்பதில் நான் திருப்தியடையவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராஜஸ்தானில் நுபுர் சர்மா கருத்தை பகிர்ந்த தையல்காரர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.