ராணுவப் படை, விமானப் படை, கடற்படை ஆகிய துறைகளில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் பணிபுரியும் வகையில் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் அக்னிவீர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில், ராணுவத்தில் பணிபுரிவதற்கான அக்னிவீர் ஆட்சேர்ப்பு திட்டச் செயல்முறையில் மாற்றம் செய்துள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
அதன்படி விண்ணப்பதாரர்கள் முதலில் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த செயல்முறை மாறுபட்டதாக இருந்தது. அதில் விண்ணப்பதாரர்கள் முதலில் உடல் தகுதித் தேர்வுக்கு உட்படுத்தப்படுவர். அதைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை, பின்னர் கடைசியாக CEE நுழைவுத் தேர்வு எழுதுவர். ஆனால் இப்போது விண்ணப்பதாரர்கள் முதலில் நுழைவுத் தேர்வு எழுதி தகுதிப் பெற வேண்டும் என ராணுவம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.
புதிய நடைமுறையில் விண்ணப்பதாரர்கள் முதலில் பரிந்துரைக்கப்பட்ட மையங்களில் ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு (CEE) எழுத வேண்டும். அதைத் தொடர்ந்து உடல் தகுதி தேர்வு, கடைசியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 19,000 அக்னிவீரர்கள் ராணுவத்தில் இணைந்துள்ளனர். மார்ச் முதல் வாரத்தில் 21,000 பேர் ராணுவத்தில் சேர உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-24-ம் ஆண்டில் ராணுவத்தில் சேர விரும்பும் 40,000 பேருக்கு இந்த புதிய ஆட்சேர்ப்பு விதிகள் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் பணிகளுக்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை சிறிய நகரங்களில் 5,000 என்றும் பெரிய நகரங்களில் 1.5 லட்சம் வரை வேறுபடுகிறது என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
ராணுவ அதிகாரிகள் கூறுகையில், விண்ணப்பதாரர்களுக்கான நிர்வாக செலவுகள் மற்றும் தளவாட ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு ஆட்சேர்ப்பு செயல்முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய செயல்முறையில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை கண்காணிக்க வேண்டி இருந்தது. இது நிர்வாக சிக்கலுக்கு வழிவகுத்தது. சட்டம் ஒழுங்கு நிலைமையைச் சமாளிக்க ஏராளமான பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட வேண்டியிருந்தது. மேலும் கணிசமான மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டியிருந்தது என்று கூறினர்.
புதிய ஆட்சேர்ப்பு செயல்முறை பேரணிகளை ஒழுங்கமைப்பதில் ஏற்படும் செலவுகளை கணிசமாகக் குறைக்கும் மற்றும் நிர்வாக மற்றும் தளவாடச் சுமையை எளிதாக்கும் என்று அதிகாரி மேலும் கூறினார். மற்றொரு அதிகாரி கூறுகையில், "புதிய செயல்முறையில் நுழைவுத் தேர்வு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை உறுதி செய்யும். பின்னர் உடல் தகுதிக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் " ன்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.