மே 10-ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஏப்ரல் மாதம் ரூ. 970.50 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை விற்றுள்ளது, தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எஸ்.பி.ஐ அளித்த பதில்களின்படி, இது 2018 ஆம் ஆண்டில் கர்நாடகாவில் முந்தைய தேர்தலுக்கு முன்னதாக விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மதிப்பை விட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகமாகும்.
2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை மொத்தம் 1,470 தேர்தல் பத்திரங்கள் ரூ 970.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என செவ்வாயன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிப்படைத்தன்மை பிரச்சாரகரும் ஓய்வுபெற்ற ராணுவ தளபதியுமான லோகேஷ் பத்ரா கேட்ட கேள்விகளுக்கு எஸ்.பி.ஐ பதில் அளித்துள்ளது.
இதையும் படியுங்கள்: கர்நாடகா: ஆட்சிக்கு எதிரான அலையை சாதகமாக கருதும் காங்கிரஸ்; சமாளிக்க மோடியை நம்பும் பா.ஜ.க
ஏப்ரல் 2018 இல், மே மாதம் கர்நாடகாவில் முந்தைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, எஸ்.பி.ஐ இரண்டாவது தவணை விற்பனையில் ரூ.114.90 கோடி மதிப்புள்ள 256 தேர்தல் பத்திரங்களை விற்றது. இரண்டாவது தவணை தொடர்பாக ஏப்ரல் 26, 2018 அன்று லோகேஷ் பத்ராவிடம் ஆர்.டி.ஐ.,யின் கீழ் இதே போன்ற கேள்விகளுக்கு அளித்த பதிலில் வங்கி இதை வெளிப்படுத்தியது.
இந்த முறை, ஹைதராபாத்தில் உள்ள எஸ்.பி.ஐ கிளையில் அதிக விற்பனை நடந்துள்ளது. அதாவது ரூ. 335.30 கோடி அல்லது மொத்தத்தில் 34%. இதைத் தொடர்ந்து கொல்கத்தா (ரூ.197.40 கோடி), மும்பை (ரூ.169.37 கோடி), சென்னை (ரூ.122 கோடி), புதுடெல்லி (ரூ.55.65 கோடி) ஆகிய நகரங்கள் உள்ளன.
விற்கப்பட்ட மொத்த பத்திரங்களில் சுமார் 58% எஸ்.பி.ஐ.,யின் புது தில்லி கிளையில் (ரூ 565.79 கோடி) பணமாக்கப்பட்டது, அங்குதான் தேசிய கட்சிகள் தங்கள் வங்கிக் கணக்குகளை வைத்திருக்க வாய்ப்புள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், கட்சிகள் தேர்தல் பத்திரங்களைப் பெறுவதற்காக நியமிக்கப்பட்ட எஸ்.பி.ஐ கிளைகளில் பிரத்யேக வங்கிக் கணக்குகளைத் தொடங்க வேண்டும். சமீபத்திய விற்பனையின் படி, 25 கட்சிகள் அத்தகைய கணக்குகளைத் தொடங்கியுள்ளன என்று RTI பதில் காட்டுகிறது.
2018 ஆம் ஆண்டில், மும்பை கிளைதான் அதிக அளவு விற்பனையை (ரூ. 51 கோடி) செய்தது. அதைத் தொடர்ந்து கொல்கத்தா (ரூ. 40 கோடி), பெங்களூரு (ரூ. 12.90 கோடி) மற்றும் புது தில்லி (ரூ. 10 கோடி) ஆகும். மொத்தம் விற்கப்பட்ட பத்திரங்களில் ரூ.6,000 தவிர மற்ற அனைத்தும் பணமாக்கப்பட்டன. புதுதில்லியில் ரூ.113.40 கோடியும், பெங்களூரில் ரூ.1.50 கோடியும் என பணமாக்குதல் மொத்தமும் இந்த இரண்டு கிளைகளில் மட்டும் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைத் தொடங்கிய பின்னர், SBI ஏப்ரல் 2018 வரை 13 கிளைகளில் பத்திரங்களை வழங்கியது, இப்போது 29 கிளைகளில் பத்திரங்கள் கிடைக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil