அகமதாபாத் விமான விபத்து: "நீ போ, நான் வருகிறேன்"; 2 நொடிகளில் மாறிப்போன இரு நண்பர்களின் வாழ்க்கை

மத்திய பிரதேசத்தின் ஜிக்சௌலி கிராமத்திலிருந்து அஹமதாபாத்தை நோக்கி புறப்பட்ட ஆரியனின் குடும்பத்தினர், அங்கே சென்றடைந்த போது, ஆரியன் உயிரிழந்து விட்டார் என்ற உண்மையை அறிந்தனர்.

மத்திய பிரதேசத்தின் ஜிக்சௌலி கிராமத்திலிருந்து அஹமதாபாத்தை நோக்கி புறப்பட்ட ஆரியனின் குடும்பத்தினர், அங்கே சென்றடைந்த போது, ஆரியன் உயிரிழந்து விட்டார் என்ற உண்மையை அறிந்தனர்.

author-image
WebDesk
New Update
Aryan Death

ஜூன் 12 அன்று, பிற்பகல் 2 மணியளவில், ஏர் இந்தியா விமானம் அஹமதாபாத்தின் பி.ஜே. மருத்துவ கல்லூரி விடுதி கட்டத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது, அந்த இரண்டு மருத்துவ மாணவர்களும் உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டிருந்தனர். தனது மொபைல் ஃபோனை நண்பனிடம் கொடுத்த 20 வயதான ஆரியன், "நீ போ, நான் கை கழுவிவிட்டு வருகிறேன்" என்று கூறினார்.

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

Advertisment

அவரது நண்பன் உணவகத்தை விட்டு வெளியேறினார். ஆரியன் கைகளைக் கழுவ அங்கேயே நின்றார். அந்த நொடியில், விமானம் கட்டடத்தை உடைத்துக்கொண்டு விழுந்தது. ஒரு நொடியில் அனைத்தும் மாறிப்போனது.

ஆரியனின் நண்பர் உயிரோடிருந்தாலும், கடும் அதிர்ச்சி அடைந்திருந்தார். ஆரியனின் ஃபோனை எடுத்து குவாலியரில் உள்ள அவரது உறவினர்களில் ஒருவருக்கு டயல் செய்தார். "நீங்கள் விரைவாக வாருங்கள். ஆரியன் காயமடைந்துள்ளான். அவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்" என்று அந்த நண்பர் கூறினார்.

மத்திய பிரதேசத்தின் ஜிக்சௌலி கிராமத்திலிருந்து அஹமதாபாத்தை நோக்கி புறப்பட்ட ஆரியனின் குடும்பத்தினர், அங்கே சென்றடைந்தபோது, ஆரியன் உயிரிழந்து விட்டார் என்ற உண்மையை அறிந்தனர்.

Advertisment
Advertisements

"ஆரியன் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர். விமானம் விபத்துக்குள்ளானபோது, அவர் உணவகத்தில் இருந்தார். அவர் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார். அவரது உடல், அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது" என ஜூனியர் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் அகில இந்திய மருத்துவ சங்கங்கள் கூட்டமைப்பின் (FAIMA) உறுப்பினரான டாக்டர் தவால் காமேதி கூறினார்.

"விமானம் விபத்துக்குள்ளான 10 நிமிடங்களுக்குள், ஆரியனின் நண்பர் எங்களை அழைத்தார். ஆரியன் அப்போதுதான் உணவகத்திற்குச் சென்றிருந்தார். அந்த சூழலில் தான் இந்தத் துயரம் நிகழ்ந்தது" என்று ஆரியனின் உறவினர் பிகம் சிங் தெரிவித்துள்ளார்

ஆரியனின் கதை குறிப்பிடத்தக்கதாக இருப்பதற்கான காரணம் அவரது விடாமுயற்சி. மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் வெற்றிபெற NEET பயிற்சி மையங்கள் கட்டாயமாக இருக்கும் ஒரு நாட்டில், ஆரியன் எந்தப் பயிற்சி மையத்திற்கும் செல்லாமலேயே 720-க்கு 700 மதிப்பெண்களை பெற்றார்.

ஆரியனை "புத்திசாலி" என்று அழைக்கும் அவரது உறவினர் பிகம், பெருமிதமும் ஆழ்ந்த துக்கமும் கலந்த குரலில், "ஆரியன், தனது முதல் முயற்சியிலேயே 720-க்கு 700 மதிப்பெண்கள் எடுத்தார். நகரங்களில் உள்ள அவரது நண்பர்களுக்கு விலையுயர்ந்த பயிற்சி வகுப்புகள் மற்றும் நிபுணர் வழிகாட்டுதல் கிடைத்தபோது, கிராமத்தில் தானாகவே தயாரான ஆரியன், இணையம் மூலமாக படித்தார்" என்று கூறினார்.

ஆரியனின் மதிப்பெண் ஒரு சாதனையை விட மேலானது. ஆரியனின் தந்தை ராம்ஹெட் ராஜ்புத், தனது இளைய மகனை ஒரு மருத்துவராக்க வேண்டும் என்ற ஒரே கனவில் இருந்ததாக கூறுகிறார். அவரது மூத்த மகன் குடிமைப் பணிகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ராம்ஹெட் தனது அனைத்து வளங்களையும், நம்பிக்கைகளையும் ஆரியனின் மருத்துவக் கல்விக்காக செலுத்தினார். பருவமழையின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட ஒரு விவசாயியாக, ராம்ஹெட் தனது குழந்தைகளுக்கு வயலில் கடுமையாக உழைக்கும் வாழ்க்கையிலிருந்து விலகி ஒரு சிறந்த வாழ்க்கையை வழங்க கடுமையாக உழைத்ததாகக் கூறுகிறார்.

தினசரி இரவு 9 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஒரு புனிதமான சடங்காக மாறியிருந்தது. ஒவ்வொரு மாலையும், தவறாமல், ஆரியன் தனது தந்தையை அழைத்து தனது நாள் நிகழ்வுகள், வகுப்புகள், சாப்பிட்ட உணவு பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்வார்.

"ஆரியனின் மரணம் குறித்து அவரது தாய்க்கு தெரியாது. ஆரியனின் இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் வீட்டிற்கு வந்து சேரும் வரை நாங்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்" என்று ஜிக்சௌலி கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் பங்கஜ் சிங் கரார் தெரிவித்துள்ளார்.

Ahmedabad

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: