புதுச்சேரி சின்னக்கடை மார்க்கெட்டை சீரமைக்க வலியுறுத்தி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட சின்ன மணிக்கூண்டு அருகே பழமையான மீன் மார்க்கெட் உள்ளது.இங்கு 50-கும் மேற்பட்ட மீனவ பெண்கள் மீன் விற்கும் தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த 7 வருடத்திற்கு முன்பு பழுதான மேற்கூரை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், கடந்த 2 வருடமாக மேற்கூரை சேதமடைந்துள்ளது.மேலும் மின் இணைப்பு, குடிநீர்,கழிவறை வசதிகள் சரிவர இல்லாமல் மீனவ பெண்கள் அவதியுற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பெய்த சிறிய மழை காரணமாக,செல்வி என்ற மீனவ பெண் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மீனவ பெண்கள் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாநில செயலாளருமான அன்பழகன் தலைமையில் சின்னக்கடை மார்க்கெட் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் புதுவை அரசையும் அதிகாரிகளையும், கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலிசார் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், புதுச்சேரியை ஆளும் பாஜக- என்.ஆர் காங்கிரஸ் அரசு, தொடர்ந்து மீனவ சமுதாய மக்களை புறக்கணித்து வருவதுடன், சிறிய மீன் மார்க்கெட்டை கூட சீரமைக்க முன்வராதது கண்டிக்கத்தக்கது என்றார். சேதம் அடைந்த மேற்கூரையையும், மின் இணைப்பையும் உறுதி அளித்தபடி சரி செய்யாவிட்டால் அதிமுக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என எச்சரிக்கை விடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“