/indian-express-tamil/media/media_files/2025/09/18/eps-aiadmk-2025-09-18-19-42-29.jpg)
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
Arun Janardhanan, Liz Mathew
அ.தி.மு.க-வில் ஒற்றுமை அவசியம் என்று அமித்ஷா வலியுறுத்திய நிலையில், கட்சிக்குள் இது உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும் என்று பழனிசாமி உறுதியாகத் தெரிவித்தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி, செவ்வாய்க்கிழமை இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், மூத்த பா.ஜ.க தலைவருமான அமித்ஷாவைச் சந்தித்தபோது, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அழுத்தத்திற்கு பணிய மறுத்துவிட்டார்.
பல வட்டாரங்கள் கூறியபடி, “ஒற்றுமை அவசியம்” என்று அமித்ஷா வலியுறுத்தினார். 2021 தேர்தலில் தினகரன் தனித்துப் போட்டியிட்டதால் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறைந்தது 23 இடங்களை இழந்தது என்றும் அவர் வாதிட்டார். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார். அத்தகைய நடவடிக்கை அ.தி.மு.க. அமைப்பை சீர்குலைக்கும் என்று கூறி, அதேசமயம் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை தங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்வதற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும் பா.ஜ.க-விடம் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தை முடிவில்லாமல் போன நிலையில், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க-வின் முக்கிய வட்டாரங்கள், தீபாவளிக்குப் பிறகு அக்டோபர் நடுப்பகுதியில் தங்கள் பேச்சுவார்த்தையைத் தொடர இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தன.
இந்த ரகசிய சந்திப்பு பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்குள்ளான மையக் குழப்பத்தை வெளிப்படுத்தியது: பழைய எதிரிகளையும், புதிய கூட்டாளிகளையும், அதேபோல தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ஒரு தலைவரையும் எப்படி கையாள்வது?
எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம் மற்றும் எம். தம்பிதுரை போன்ற அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவின் இல்லத்தில் அவரை சந்தித்தார். அதிகாரபூர்வமான காரணம், “தமிழ்நாட்டின் நலனுக்கான கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை” என்று கூறப்பட்டாலும், அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று டெல்லியிலிருந்து வரும் அழுத்தத்திற்கு தீர்வு காண இ.பி.எஸ் விரும்பினார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய வட்டாரங்கள் கூறியபடி, சமரசத்திற்காக அமித்ஷா உணர்ச்சிப்பூர்வமாக வாதிட்டார். 2021 தேர்தலில் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வின் ஒரு பகுதியாகப் போட்டியிட்டிருந்தால், “கட்சி 100 இடங்களைக் கடந்திருக்கும்” என்று கூறினார். “எனவே, இந்த முறை நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்” என்று பா.ஜ.க தலைவர் கூறினார். 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி 2021 சட்டமன்றத் தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்றது.
2016-ல் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி படிப்படியாக கட்சி மீது தனது கட்டுப்பாட்டை விரிவாக்கினார். அப்போது, ஜெயலலிதாவின் உண்மையான வாரிசாகத் தன்னை கருதிய ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் இறுதியில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அப்போது அ.தி.மு.க-வில் நடந்த நிகழ்வுகளில் பா.ஜ.க முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது.
2024 மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க, ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் இருவருடனும் ஓர் ஏற்பாடு செய்திருந்தது, அப்போது அ.தி.மு.க. தனியாகப் போட்டியிட்டது.
செவ்வாய்க்கிழமை இரவு நடந்த சந்திப்பில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலாவின் சகோதரி மகனான டி.டி.வி. தினகரன், என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக இ.பி.எஸ்ஸை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்ததை இ.பி.எஸ். அமித்ஷாவிடம் நினைவுபடுத்தியதாக கூறப்படுகிறது. “கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்காத ஒருவரை நான் எப்படி கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள முடியும்?” என்று இ.பி.எஸ். கேட்டார்.
டி.டி.வி.தினகரன் கடந்த காலத்தைப் போல செல்வாக்கு மிக்கவரோ அல்லது பிரபலமானவரோ இல்லை என்றும், மேலும் “கூட்டணியில் டி.டி.வி. தினகரனை வைத்துக்கொள்ள பா.ஜ.க-க்கு சுதந்திரம் உள்ளது… அவர்களின் (தினகரன் மற்றும் ஓ.பி.எஸ்) இருப்புக்கு நான் ஆட்சேபிக்க மாட்டேன்” என்றும் அமித்ஷாவிடம் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க.வும் அதற்கேற்ப கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டிற்குத் தயாராக இருப்பதாகவும் இ.பி.எஸ். தெரிவித்தார்.
ஓ.பி.எஸ்-ஸை அ.தி.மு.க.வுக்குத் திரும்ப அழைத்துக்கொள்வது பற்றி அமித்ஷா வாதிட்டபோது, “ஒரு சாதாரண தொண்டராகத் திரும்புவதற்கான ஓ.பி.எஸ்-ஸின் வாய்ப்பை ஏன் இ.பி.எஸ் எதிர்க்கிறார்?” என்று அமித்ஷா அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு அ.தி.மு.க. தலைவர், ஓ.பி.எஸ் ஒரு முன்னாள் முதலமைச்சர் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் என்பதால், வெறும் தொண்டராக அவரது வருகை “யதார்த்தமற்றது” என்றும், அது தவிர்க்க முடியாமல் ஒரு அதிகாரப் போட்டிக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.
இ.பி.எஸ் மற்றும் அவரது அணியினர் தங்கள் தேர்தல் உத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமித்ஷா அறிவுறுத்தியதாக அறியப்படுகிறது. டெல்லியில் உள்ள பா.ஜ.க-வின் முக்கிய வட்டாரங்கள், இ.பி.எஸ்-ன் தற்போதைய மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் “விரும்பிய தாக்கத்தை” ஏற்படுத்தவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அ.தி.மு.க. தலைவரிடம் தெரிவித்ததாகக் கூறின.
அ.தி.மு.க. பிரதிநிதிகளுடன் 15 நிமிடங்கள் நடந்த சந்திப்புடன், அமித்ஷா ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் இ.பி.எஸ் உடன் தனியாக சுமார் 20 நிமிடங்கள் உரையாடியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
அ.தி.மு.க. வட்டாரங்கள், இ.பி.எஸ் சென்னை திரும்பியதும், பா.ஜ.க-வுடன் நடந்த தனது கலந்துரையாடல்கள் குறித்து கட்சித் தொண்டர்களுக்கு விளக்கமளித்தார். மேலும், அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், “ஒற்றுமை” குறித்துப் பேசிய உடனேயே இ.பி.எஸ்-ஸால் அனைத்து கட்சி பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டது குறித்தும் அவர் பேசினார்.
செங்கோட்டையன் மீது மேலும் நடவடிக்கை இருக்குமா என்று கேட்கப்பட்டபோது, இ.பி.எஸ்-க்கு நெருக்கமான ஒரு மூத்த தலைவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “அதற்கு அவசியமில்லை. அவருக்கு எந்த செல்வாக்கும் இல்லை. அவரால் கொடுக்கப்பட்ட 10 நாள் கால அவகாசம் (வெளியேற்றப்பட்ட தலைவர்களை சேர்க்க) முடிவடைந்துவிட்டது, களத்தில் எந்த தாக்கமும் இல்லை… அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட மாட்டார். அவர் விரும்பினால் வெளியேறலாம். அவர் மீண்டும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆக மாட்டார், அவர் தொடரும் வரை ஒரு சாதாரண அ.தி.மு.க. தொண்டராக இருப்பார்” என்றார்.
செங்கோட்டையனுக்கு ஆதரவாக இருந்ததாகவும், அவரை டெல்லியில் சந்தித்ததாகவும் கருதப்படும் பா.ஜ.க-வை மறைமுகமாக சுட்டிக்காட்டிய அ.தி.மு.க. தலைவர், “கலகத்தை வழிநடத்த அவரைத் தேர்ந்தெடுத்தவர்கள் தவறு செய்துவிட்டார்கள்” என்றும் கூறினார்.
பா.ஜ.க-வுக்கு வேறு வழியில்லை என்ற உண்மையும் அ.தி.மு.க.வின் இந்த உறுதியான நிலைப்பாட்டிற்கு ஒரு காரணமாகும். பா.ம.க.வில் ஒரு பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும், தே.மு.தி.க மன வருத்தத்தில் உள்ளது. இந்த நேரத்தில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, நடிகர் விஜய்யின் புதிய கட்சியுடன் இணைந்துள்ளார்.
தற்போது அ.தி.மு.க. மற்றும் அதன் பலத்தின் மீது கூட்டணி பெரும்பாலும் தங்கியிருப்பதால், ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் சேர்க்கக்கூடிய எந்த எண்ணிக்கையையும் இழக்க பா.ஜ.க-வால் முடியாது என்பதே அதன் அச்சம்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு மூத்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி, இந்த விஷயத்தை பா.ஜ.க இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டார். “பா.ஜ.க-வும் அ.தி.மு.க.வும் மீண்டும் ஒன்று சேர்ந்தபோது, ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பது என்ற புரிதல் இருந்தது… ஆனால், செங்கோட்டையன் சம்பந்தப்பட்ட இந்த இணை செயல்பாடு தலைகீழாக மாறிவிட்டது. அ.தி.மு.க-வுக்குள் இ.பி.எஸ். மிகவும் பலமாக உள்ளார்” என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.